மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், உள்ளிட்ட அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று தேசியக்கொடி அரசு விதிமுறைகளுடன் ஏற்றப்பட்டு மாலை 6 மணிக்குள்ளாக இறக்கப்பட்டது.
ஆனால் கொள்ளிடம் அருகே மாதாளம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் நேற்று காலை குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்குள் கொடி இறக்கவில்லை. தொடர்ந்து இரவு முழுவதும் பறந்து கொண்டே இருந்தது. இன்று காலை வரை தேசியக்கொடி இறக்கவில்லை.
பொதுவாக அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின விழா ஆகிய நாட்களில் காலை 7:30 மணி முதல் ஏற்றி பிறகு ஆறு மணிக்குள் இறக்கி விட வேண்டும் என்று விதி கூறுகிறது. சூரியன் உதித்த உடன் தேசியக்கொடியை ஏற்றுவதும் மாலை ஆறு மணிக்குள் தேசிய கொடியை இறக்குவதும் விதியாக இருந்து வருகிறது. ஆனால் விதிக்கு புறம்பாக மாதானம் ஆதிதிராவிடர் நல பள்ளியில் நேற்று மாலை 6 மணிக்கு தேசய கொடியை இறக்காமல் இரவு முழுவதும் பறக்க விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.