சேலம்: ''சேலம் ரயில்வே கோட்டத்தில், 2022 - 23ல், 778 கோடி ரூபாய் மொத்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளது,'' என, கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் பேசினார்.
சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ், தேசியக்கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
தெற்கு ரயில்வேயில் இளைய கோட்டமாக உள்ள சேலம், இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் கோட்டமாக விளங்குகிறது. கடந்த ஆண்டில் ஊழியர்களின் விழிப்புணர்வு, கண்காணிப்பால் விபத்தில்லாமல் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
'பாரத் கவுரவ்' ரயில், 6 முறை இயக்கப்பட்டு, 4.30 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 2021 - 22ல் சேலம் கோட்ட வரலாற்றில் முதல்முறை, 3.269 மில்லியன் டன் சரக்கு ஏற்றிச்சென்று சாதனை படைக்கப்பட்டது. இந்த ஆண்டு, 2.3 மில்லியன் டன் சரக்கு ஏற்றப்பட்ட நிலையில் நடப்பாண்டு, 3 மில்லியன் அளவை தாண்டும் என்பதில்
சந்தேகமில்லை.
அதேபோல், 2021 - 22ல் அதிகபட்ச சரக்கு வருவாயாக, 274.33 கோடி ரூபாய் ஈட்டப்பட்டது. இது கடந்த ஆண்டை விட, 18.98 சதவீதம் அதிகம். சேலம் கோட்டத்தில், 2022 - 23ல், 778 கோடி ரூபாய் மொத்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட, 53.8 சதவீதம் அதிகம். பயணியர் வருவாயில், 87 சதவீதம், 'பார்சல்' வருவாயில், 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 69 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அனைத்து பிரிவுகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை குறிக்கிறது. 94 சதவீத ரயில்கள், நேரம் தவறாமல் இயக்கப்பட்டுள்ளன. சேலம் - விருதாசலம், கோவை - மேட்டுபாளையம் பிரிவுகளில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயணியர் வசதிக்கு, சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன், 5வது பிளாட்பார்மில் நவீன வசதிகள், நடைமேடைகளை இணைக்கும் சுரங்கப்பாதை சீரமைப்பு, சேலம், ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம் ஸ்டேஷன்களில் பேட்டரி மூலம் இயங்கும் கார் சேவை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரயில் இயக்கத்தை எளிதாக்க, 'சேலம் யார்டு' மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம், உதவி பாதுகாப்பு கமிஷனர் ரதீஷ்பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement