இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று 2வது நாளாக சரிவுடன் துவங்கின. சென்செக்ஸ் 700 புள்ளிகள் அளவுக்கு வீழ்ச்சியடைந்தன.
இன்றைய (ஜன.,27) வர்த்தக நேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 238 புள்ளிகள் சரிந்து, 59967 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 60 புள்ளிகள் சரிந்து, 17831 புள்ளிகளுடனும் இருந்தன. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் அறிக்கை காரணமாக 2வது நாளாக அதானி குழும பங்குகள், 20 சதவீதம் அளவுக்கு இன்றும் மளமளவென சரிந்தன.
![]()
|
ஆட்டோமொபைல், பார்மா பங்குகள் தவிர அனைத்து துறை பங்குகளும் சரிவை கண்டன. ஜிண்டால், டாடா மோட்டார்ஸ் பங்குகள் உயர்வுடன் தொடர்கின்றன. தொடர்ந்து காலை 11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 732 புள்ளிகளும், நிஃப்டி 202 புள்ளிகள் அளவுக்கு வீழ்ச்சியை கண்டன.
வரும் பிப்.,1ம் தேதி அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டமும், இந்தியாவில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இதன் தாக்கம் பங்குச்சந்தைகளில் எதிர்மறையாக எதிரொலிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், பட்ஜெட் தாக்கலுக்கு பின் பங்குச்சந்தைகள் எழுச்சி பெறுமென பங்குச்சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.