வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : தேர்வில் குறுக்கு வழியை நாட வேண்டாம். இது, நீண்ட காலத்துக்கு பயன் அளிக்காது. நேர மேலாண்மையை பின்பற்றுவதை உங்கள் தாயிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். கடின உழைப்புக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்,'' என, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பிரதமர் மோடி அறிவுரையும், ஆலோசனையும் வழங்கினார்.
பிரதமர் மோடி, 2018ல் இருந்து, 'பரிக்சா பே சர்ச்சா' என்ற பெயரில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு அறிவுரையும், ஆலோசனையும் வழங்கி வருகிறார். இந்தாண்டுக்கான நிகழ்ச்சி, புதுடில்லியில் உள்ள டல்கோத்ரா விளையாட்டரங்கில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க, நாடு முழுதும் இருந்து, 38 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். தேர்வு பயத்தை போக்குவது, மன அழுத்தம் இன்றி தேர்வு எழுதுவது, நேர மேலாண்மையை பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில், மாணவ - மாணவியரின் சரமாரி கேள்விகளுக்கு, உடனுக்குடன் பதில் அளித்து, பிரதமர் அசத்தினார்.

படிப்பில் கவனம்
மாணவர்களின் கேள்விகளுக்கு பிரதமர் அளித்த பதில்: தேர்வின்போது நேர மேலாண்மையை பின்பற்றுவது மிகவும் அவசியம். நேர மேலாண்மை என்பது தேர்வுக்கு மட்டுமல்ல; நம் வாழ்க்கைக்கும் மிகவும் அவசியம். உங்கள் தாய் வீட்டில் எப்படி நேரத்தை பயன்படுத்துகிறார் என்பதை கூர்ந்து கவனியுங்கள்; அதிலிருந்து நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். தேர்வு முடிவுகளில் மாணவர்களிடம், அவர்களது பெற்றோர் அதிகம் எதிர்பார்க்கின்றனர்; இது இயற்கையானது தான். ஆனால், எதிர்பார்ப்புகளைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல், மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்களின் தேர்வு முடிவை, அவர்களது குடும்பத்தினர் சமூக அந்தஸ்தாக கருதுவது சரியான விஷயம் அல்ல. தேர்வு விஷயத்தில் மாணவர்களுக்கு பெற்றோர் அழுத்தம் தரக்கூடாது. தேர்வில் ஒருபோதும் குறுக்கு வழியை நாட வேண்டாம். இது, சில நேரத்தில் கைகொடுக்கலாம்; ஆனால், நீண்ட காலத்துக்கு ஏமாற்ற முடியாது. உங்கள் மீது முதலில் நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.

கடினமான உழைக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும். உங்களை நீங்களே எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. தேர்வு முடிவே, வாழ்க்கையின் இறுதியான விஷயம் அல்ல.மாணவர்கள் தங்கள் எல்லைகளை விரிவு படுத்த வேண்டும். மாணவர்கள், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்ததும், பெற்றோர் அவர்களுக்கு சிறிது பணம் கொடுத்து, சில இடங்களுக்கு சென்று வரும்படி கூற வேண்டும். அப்படி சென்று வந்ததும், அந்த அனுபவத்தை எழுதும்படி கூற வேண்டும்.
சமூகத்தில் பலவிதமான எதிர்பார்ப்புகள், சவால்களை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது. எனவே, அவர்கள் பல இடங்களுக்கும் சென்று, சமூகத்தில் உள்ள பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வர அனுமதிக்க வேண்டும்.
நல்ல விஷயம் தான்
கேள்விகள் கேட்கும் மாணவர்களை, ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். கேள்விகள் கேட்பதன் வாயிலாக, பல விஷயங்களை அறிய, அவர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்; இது நல்ல விஷயம் தான். 'விமர்சனத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள்' என, ஒரு மாணவர் கேட்கிறார். இது, பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி. இருந்தாலும் பதில் சொல்கிறேன். விமர்சனத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. விமர்சனம் என்பது, ஜனநாயக நடைமுறையில் ஒரு ஆரோக்கியமான விஷயம் என நம்புகிறேன்.

நாம் கடுமையாக உழைப்பவர் என்றால், அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. சில நேரங்களில் விமர்சனங்களே உங்களின் பலமாக மாறும். என் தலைமையிலான அரசை சிலர் விமர்சித்தனர். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன், 'இந்த அரசில் பொருளாதார நிபுணர்கள் இல்லை. பிரதமருக்கும் பொருளாதார புரிதல் இல்லை. இது சராசரி அரசு' என, சிலர் கட்டுரை எழுதினர். ஆனால், அந்த சராசரியே தற்போது உலகில் பிரகாசிக்கிறது. அதிலும், கொரோனா போன்ற பெரும் தொற்று காலத்துக்குப் பின், நம் நாடு பொருளாதாரத்தில் உலக நாடுகளுக்கு முன் மாதிரியாக திகழ்கிறது.
பல வியத்தகு வெற்றிகளை அடைந்த மனிதர்கள் எல்லாம், ஒரு காலத்தில் சராசரி என விமர்சிக்கப்பட்டவர்கள் தான். விமர்சனம் தான், நம்மை பட்டை தீட்டுகிறது. ஒரு சிலர், விமர்சிப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர்; இது, உள்நோக்கம் உடையது. இதுபோன்ற விமர்சனங்களை மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு மாணவர்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளித்தார்.
'பரிக்சா பே சர்ச்சா' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:தற்போது உலகம் முழுதும் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேநேரத்தில், அதை தேவையான விஷயத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 'ஸ்மார்ட் போன்' போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதில் கட்டுப்பாடும், கவனமும் வேண்டும். நம் நாட்டில், சராசரியாக தினமும் ஆறு மணி நேரத்தை, மொபைல் போன், கம்ப்யூட்டர் பார்ப்பது போன்றவற்றுக்கு மக்கள் செலவிடுகின்றனர்; இது கவலைக்குரியது. கடவுள் நமக்கு அளவற்ற ஆற்றலுடன், சுதந்திரமான இடத்தையும், தனித்துவத்தையும் கொடுத்துள்ளார். அப்படி இருக்கும்போது, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகக் கூடாது. நான் சுறுசுறுப்பாக செயல்பட்டாலும், மொபைல் போனுடன் என்னை பார்ப்பது அரிது. இதுபோன்ற விஷயங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியுள்ளேன். அப்போது மட்டுமே அதில் இயங்குவேன். தேவையில்லாமல் அதில் நேரத்தை செலவிட மாட்டேன்.ஒவ்வொரு வீட்டிலும், மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்கள் பயன்படுத்தாத பகுதியை ஏற்படுத்த வேண்டும். அங்கு, மகிழ்ச்சியான தருணங்களை குடும்பத்தினருடன் செலவிட வேண்டும். இதுபோன்ற விஷயங்களால் மின்னணு சாதனங்களுக்கு அடிமையாவதில் இருந்து, நாம் நம்மை பாதுகாக்க முடியும்.இவ்வாறு பிரதமர் பேசினார்.

'பரிக்சா பே சர்ச்சா' நிகழ்ச்சி பற்றி தமிழக பா.ஜ., பொறுப்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்தின் அறிக்கை:இந்நிகழ்ச்சி குறித்து, பெற்றோர், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர், முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர், தன்னார்வ அமைப்புகள் என பலருடன் இணைந்து, மாணவ - மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.இதன் விளைவாக, புதுடில்லியில் பிரதமர் மோடி பங்கேற்று ஆலோசனை வழங்கிய நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தமிழகம் முழுதும் 2,700 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவ - மாணவியர் பங்கேற்றனர். நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியப் போட்டியில், தமிழக மாணவர்கள் அதிகம் பங்கேற்றனர். இதனால் தான், பிரதமர் மோடியிடம், மதுரையைச் சேர்ந்த மாணவி, முதல் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.