ஆமதாபாத்: குடியரசு தினத்தன்று குஜராத்தின் ஆமதாபாதில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்த நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
குஜராத்தில் உள்ள ஆமதாபாத் நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குசமீபத்தில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. இதில், குடியரசு தினத்தன்று நகரில் உள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து, விசாரணை நடத்திய போலீசார், நான்கு பேரை நேற்று அதிரடியாக கைது செய்தனர். இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: குடியரசு தினத்தன்று ஆமதாபாத் நகரின் முக்கிய பகுதிகளில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து தீவிர விசாரணை நடத்தினோம். இதையடுத்து, ஆமதாபாதைச் சேர்ந்த மூன்று பேரை நேற்று கைது செய்தோம்.
முக்கிய குற்றவாளியான உத்தர பிரதேசத்தின், பலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் என்பவரை, அந்த மாநில போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.