மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் சாலை தடுப்பின் மீது டூவீலர் மோதி பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கடலாடி அருகே ஆப்பனுார் மகமாயி தாக்கல் செய்த மனு:எனது கணவர் மூக்கூரான். இவர் 2018 ஏப்.,20ல் இரவு 7:30 மணிக்கு டூவீலரில் கடலாடி வனப்பேச்சியம்மன் கோயில் அருகே சென்றார். போலீசார் அமைத்திருந்த தடுப்பு (பேரிகாட்) மீது மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டது. கணவர் இறந்தார். தடுப்பு உள்ளது பற்றி சம்பவ இடத்தில் எவ்வித முன்னறிவிப்பும் செய்யவில்லை. அனுமதியும் பெறவில்லை. போலீசார் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளனர். கணவர் இறந்ததற்கு பொறுப்பேற்று ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி தமிழக பொதுத்துறை செயலர், உள்துறை செயலருக்கு மனு அனுப்பினேன்.
நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மகமாயி குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: வழக்கு நிலுவையில் இருந்தபோதுமனுதாரருக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. மேலும் இழப்பீடு பெற மனுதாரருக்கு உரிமை உள்ளதா என கேள்வி எழுகிறது. மனுதாரருக்கு எதிராக 2 அம்சங்கள் உள்ளன. மனுதாரரின் கணவர் ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியுள்ளார். ஹெல்மெட் அணிந்திருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார். தலையில் ஏற்பட்ட காயத்தால் மட்டுமே மரணம் நிகழ்ந்தது. டூவீலர் மனுதாரரின் கணவருடைய நண்பருக்கு சொந்தமானது. அதற்கு இன்சூரன்ஸ் செய்யப்படவில்லை.தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் அமைக்கும்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை, மண்டல போக்குவரத்து அதிகாரிகளுடன் போலீசார் கலந்தாலோசிக்க வேண்டும்.
பின் தடுப்புகள் அமைக்க அனுமதிக்க வேண்டும்.தடுப்புகள் இருப்பது இரவில் 100 மீ., துாரத்தில் தெளிவாக தெரியும் வகையில் இருபுறமும் ஒளிரும் பிரதிபலிப்பான்கள் இருக்க வேண்டும். வாகனங்களுக்கு குறிப்பாக பெரிய வாகனங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில், போதிய துாரத்தில் தடுப்புகள் வைக்க வேண்டும். தேவையற்ற தடுப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும். வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், தடுப்புகளில் எவ்வித வடிவ எழுத்தும் இடம்பெறக்கூடாது என்பன உட்பட பல்வேறு வழிகாட்டுதல்களை இந்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ளது.
இந்த அம்சங்கள் குறித்து ராமநாதபுரம் எஸ்.பி.,யின் பதில் மனுவில் முற்றிலும் மவுனம் நிலவுகிறது. மனுதாரர் குறிப்பிடும் குற்றச்சாட்டை அரசு தரப்பு கடந்து செல்லவில்லை. அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முறையாக கடைப்பிடிக்கப்பட்டன என்பதை அரசு தரப்பில் தெளிவுபடுத்த வேண்டும். அரசு தரப்பின் மீது சுமத்தப்பட்ட இச்சுமை விடுவிக்கப்படவில்லை. மனுதாரருக்கு மேலும் ரூ.1 லட்சத்தை தமிழக அரசு தரப்பில் இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.