மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பள்ளி ஆசிரியரை மீண்டும் நிர்வாக அலுவலராக பணியமர்த்த வலியுறுத்தி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 30 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். நிர்வாக அலுவலராக கடந்த மூன்று ஆண்டுகளாக கணித ஆசிரியராக பணியாற்றும் ஆர்.சந்திரசேகர் பொறுப்பில் உள்ளார்.
இவர் மாணவிகளை தாக்கியதாக புகார் வந்ததாக சைல்ட் லைன் அமைப்பினர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டதாகவும், இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் அவரை பொறுப்பில் இருந்து விடுவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதனை மாணவிகள் மறுத்துள்ள நிலையில், திடீரென பள்ளி நிர்வாகம் அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்கி உள்ளது. இதனை கண்டித்தும், சந்திரசேகரை மீண்டும் அதே பொறுப்பில் பணியமர்த்த வலியுறுத்தியும் அப்பளியின் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளியின் முதல்வர் கண்ணகி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியர் சந்திரசேகரை மீண்டும் நிர்வாக அலுவலரை பணியமர்த்த பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொண்டதாகவும், வகுப்புக்கு செல்லுமாறும் வலியுறுத்தினார்.
ஆனால் நிர்வாக அலுவலர் பள்ளிக்கு வந்து அவரது இருக்கையில் அமர்ந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கூறி மாணவர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது