புதுடில்லி: இன்று லோக்சபாவுக்கு தேர்தல் நடந்தால், பா.ஜ., - 284 இடங்களிலும், காங்கிரஸ் - 191 இடங்களிலும் வெற்றி பெறும் என இந்தியா டுடே - சிவோட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
2024ம் ஆண்டு லோக்சபாவுக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் மக்களின் மனநிலையை அறிய ' மூட் ஆப் தி நேஷன் என்ற தலைப்பில், 'இந்தியா டுடே' ஆங்கில சேனல் சி வோட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில்,1,40,917 பேர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர். இதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று லோக்சபாவுக்கு தேர்தல் நடந்தால் பாஜ., - 284 இடங்களிலும், காங்கிரஸ் - 191 இடங்களிலும் வெற்றி பெறும். அதேபோல், பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ள செல்வாக்கு குறையவில்லை. 72 சதவீதம் பேர் மோடியின் செயல்பாடுகளுக்கு திருப்தி தெரிவித்துள்ளனர்.

அரசு மீது திருப்தி
கோவிட் பிரச்னை, பணவீக்கம் மற்றும் சீன அச்சுறுத்தலை தாண்டி அரசின் செயல்பாடுகளுக்கு 67 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் கிடைத்த முடிவுகளை விட 11 சதவீதம் அதிகம் ஆகும்.
ஆக., மாத கருத்துக்கணிப்பில், 37 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்த நிலையில், இது தற்போது 18 சதவீதமாக குறைந்துள்ளது.
அரசின் சாதனை

கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்தியதை அரசின் மிகப்பெரிய சாதனையாக 20 சதவீதம் பேர் கருதுகின்றனர். காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதை 14 சதவீதம் பேரும், ராமர் கோயில் கட்டுவதை 12 சதவீதம் பேரும் பா.ஜ., அரசின் மிகப்பெரிய சாதனையாக கருதுகின்றனர்.
அரசின் தோல்வி
அதேபோல், அரசின் பெரிய தோல்வியாக 25 சதவீதம் பேர் விலைவாசி உயர்வையும், 17 சதவீதம் பேர், வேலைவாய்ப்பு பிரச்னையை சரியாக கையாளததையும், 8 சதவீதம் பேர் கோவிட் பிரச்னையை கையாண்ட விதத்தையும் அரசின் தோல்வியாக கூறியுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.