வடமதுரை: அய்யலுாரில் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் சமீபத்தில் அகலப்படுத்தப்பட்ட நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையால் விபத்துகள் நடக்கின்றன.
அய்யலுார் பேரூராட்சியின் கிழக்கு பகுதியில் பஞ்சம்தாங்கி, காக்காயன்பட்டி, ஏ.கோம்பை, தெற்கு முடக்கு, குப்பாம்பட்டி, பாலத்தோட்டம், கிணத்துபட்டி, செங்குளத்துபட்டி, கணவாய்பட்டி, கொன்னையம்பட்டி போன்ற கிராமமக்கள் அய்யலுார் வந்து செல்ல வனத்துறை அலுவலகம் வழியே செல்லும் செந்துறை ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
இதுதவிர அரசு மேல்நிலைப்பள்ளி, கால்நடை மருந்தகம், குருந்தம்பட்டி, புத்துார் வழியே ஆலம்பட்டியை இணைக்கும் முக்கிய ரோடும் இது வழியே சென்று பிரிகிறது. இதற்கு நேர் எதிர் திசையில் வளவிசெட்டிபட்டி, கடவூர் வழியே கரூரை இணைக்கும் மற்றொரு முக்கிய ரோடும் நான்குவழிச்சாலையில் இருந்து பிரிகிறது.
இதனால் இந்த நால்ரோடு சந்திப்பு என்பது ஆபத்தான இடமாக உள்ளது. நாளுக்கு அதிகரிக்கும் வாகன போக்குவரத்தால் அடிக்கடி விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அய்யலுாரில் இருந்து கிழக்கு பகுதி கிராமங்களுக்கு செல்லும் ஆட்டோக்கள், டூவீலர்கள் நான்கு வழிச்சாலையை குறுக்கிட்டு கடப்பதை தவிர்க்க எதிர்திசையில் பயணிக்கும் நிலை உள்ளது. இதனால் விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் மேம்பால பகுதி அருகில் முடியும் சர்வீஸ் ரோடு சமீபத்தில் நீட்டிப்பு செய்யப்பட்டு கடவூர் ரோடு பிரிவு வரை அகலமாக்கப்பட்டுள்ளது.
திருச்சி திசையில் அகலமாக்கப்பட்ட ரோட்டில் வேகத்தடையும் அமைத்துள்ளனர். இதனால் அய்யலுாரில் இருந்து அகலமாக்கப்பட்ட ரோட்டில் செல்வோர் வேகத்தடையில் ஏறுவதை தவிர்த்து இடப்பக்கமாக வாகனங்களை செலுத்தி பின்னர் செந்துறை ரோட்டிற்குள் செல்கின்றனர்.
இதனால் விபத்து தவிர்க்க அகலமாக்கப்பட்ட ரோட்டில் வேகத்தடையால் எதிரே வாகனங்களுடன் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதை தவிர்க்க வேகத்தடையை அகற்றிவிட்டு மாற்று பாதுகாப்பு ஏற்பாடாக வெள்ளை நிறத்தில் ரோட்டில் வர்ணம் பூச நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோடை அகலமாக்குங்க
வி.ஆறுமுகம், அ.தி.மு.க., நகர பொருளாளர், களர்பட்டி: கடவூர் பிரிவில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. இதே போல் திருச்சி திசையில் மேம்பாலத்தின் சரிவு பகுதி முடியும் இடத்தில் இருக்கும் அய்யலுார் மயானத்திற்கு ஆபத்தான முறையில் கடக்கும் நிலை உள்ளது.
இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்க மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து கடவூர் ரோடு சந்திப்பை தாண்டி ரோட்டை கீழே இறக்க வேண்டும். திருச்சி திசையில் கிழக்கு திசையில் அகலமாக்கியது போல் சர்வீஸ் ரோட்டை மேற்கு திசையிலும் அகலமாக்கி கடவூர் ரோட்டுடன் இணைக்க வேண்டும்.
சுரங்கப்பாதை அமைக்கலாமே
எம்.மனோகரன்ஜோதிபாசு, மார்க்சிஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினர், கொன்னையம்பட்டி: அய்யலுார் வனத்துறை அலுவலகம் இருக்கும் ரயில்வே கேட்டிற்கு பதிலாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.
இதன் நீடிப்பை நான்குவழிச்சாலையை கடந்து கடவூர் ரோடு வரையும் நீடித்தால் போக்குவரத்தும் சுலபமாகும். நால் ரோடு சந்திப்பு விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும். களர்பட்டியில் இருந்து ரயில்வே பகுதி வழியே செல்லும் தடத்தை மேம்படுத்தி தந்தால் பொதுமக்கள் ரயில்வே துறையினருக்கும் உபயோகமாக இருக்கும்.
விடுப்பட்ட - 50 மீ., துாரம்
ஆர்.முருகன், த.மா.கா., வட்டாரத் தலைவர், கிருஷ்ணப்பநாயக்கனுார்: நான்குவழிச்சாலையில் சமீபத்தில் திருச்சி திசையில் அகலமாக்கப்பட்ட பகுதியில் 50 மீட்டர் துாரம் விடப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் நான்குவழிச்சாலையை கடக்காமல் பேரூராட்சி அலுவலக ரோடு வழியே செல்லும் போது குறிப்பிட்ட பகுதியில் எதிர்திசை வாகனங்களுடன் விபத்தில் சிக்கும் வகையில் வாகனங்கள் இடப்பக்கமாக ஏறி செல்லும் நிலை உள்ளது. விடுப்பட்ட பகுதியிலும் ரோட்டை அகலமாக்க வேண்டும்.
-தெருவிளக்கின்றி விபத்து
ஆர்.கருப்பன், பேரூராட்சி தலைவர், அய்யலுார்: அய்யலூரின் நடுவே விபத்துகளை தவிர்க்க நான்குவழிச்சாலையில் மேம்பாலம், இரு பக்கமும் சர்வீஸ் ரோடுகளும், மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் சர்வீஸ் ரோடு நீட்டிப்பு செய்யப்பட்ட பகுதியில் தெருவிளக்கு வசதியின்றி விபத்து அபாயமாக உள்ளது. கடவூர் பிரிவு வரை மேற்கு பகுதியிலும் சர்வீஸ் ரோட்டை அகலப்படுத்த வேண்டும். மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து கடவூர் பிரிவு பகுதியிலும் சுரங்கப்பாதை அமைக்க நெடுஞ்சாலை ஆணையத்திடம் பேரூராட்சி சார்பில் வலியுறுத்த முடிவு செய்துள்ளோம்,என்றார்.