புதுடில்லி: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்த அதானியின், நிறுவன பங்குகள் வீழ்ச்சியடைந்தது. இதனால், அவர் உலகப்பணக்காரர்கள் பட்டியலில் 7 வது இடத்திற்கு பின்தங்கினார்.
அதானி நிறுவன பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்த போது அதானி, உலகப்பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார். பிறகு மிக நீண்ட காலம் 3வது இடத்தில் இருந்தார். இச்சூழ்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பாக் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில்,
அதானி குழும நிறுவனங்கள், சந்தையை தவறாக கையாண்டுள்ளதாகவும், கணக்குகளில் மோசடிகள் இருப்பதாகவும் கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதானி நிறுவனம், அடுத்த கட்டமாக சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறியுள்ளது.

இதனால், பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு கடந்த புதன் கிழமை முதல் வீழ்ச்சியடைந்து வருகிறது.. இன்றும்(ஜன.,27) பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கியதும், அதானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களாக குறைந்தது. இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 7 வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார். தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸசுக்கு (104 பில்லியன் டாலர்கள்) அடுத்த இடத்தில் அதானி உள்ளார்.