வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஈரோடு: அ.தி.மு.க.,வுக்கு சோதனை என்பது புதிதல்ல. அத்தனை சோதனைகளையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளோம் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கான, 2ம் நாள் ஆலோசனை கூட்டம், ஈரோடு, பெருந்துறை சாலை, ஆலயமணி மஹாலில் நடந்தது.ஈரோடு மாநகர் மாவட்ட செயலர் ராமலிங்கம் வரவேற்றார். தேர்தல் பணிக்குழு தலைவர் செங்கோட்டையன், உறுப்பினர்கள் தமிழ்மகன் உசேன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு, வாக்காளர் விபரங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி பழனிசாமி பேசியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் த.மா.கா., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் அ.தி.மு.க., தேர்தலை சந்திக்கிறது. அ.தி.மு.க.,வுக்கு சோதனை என்பது புதிதல்ல. அத்தனை சோதனைகளையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளோம்.
சில எட்டப்பர்கள் எதிர் முகாம்களை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து கொண்டு, அ.தி.மு.க.,வுக்கு எதிரான வேலைகளை செய்து வருகின்றனர். எப்படியாவது அ.தி.மு.க.,வை முடக்க வேண்டும்; அழிக்க வேண்டும் என, எதிரிகளோடு சேர்ந்து செயல்படுகின்றனர். அவர்களுக்கு இத்தேர்தல் வெற்றி மூலம் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

எம்.ஜி.ஆர்., தோற்றுவித்து, ஜெயலலிதாவால் காக்கப்பட்ட இந்த இயக்கத்தை, அவ்விரு தலைவர்களின் தியாகங்களை பின்பற்றி ஒன்றுபட்டு, உழைத்து, வெற்றி பெற்று, சாதனைகளை எட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.