”தாயை பிரிந்த சோகம் தீருவதற்குள், பணியில் சேர்ந்த நான்காவது நாளில் நீக்கப்பட்டது, தன்னை முகத்தில் அறைந்தது போல இருந்தது” என கூகுள் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால், அதனை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற முன்னணி கார்ப்பரேட்
நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக நிறுவனத்துக்காக உழைத்த பலர், பணிநீக்க நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ளனர். கூகுளில் மட்டும் 12,000 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான டாமி யார்க் 2021 டிசம்பரில் கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தவர். அடுத்த பிப்ரவரியில் அவரது அம்மாவுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலனிக்காமல் அவரது தாய் சமீபத்தில் இறந்துவிடவே, விடுப்பில் இருந்தவர். பணிக்கு சேர்ந்த நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர், லிங்க்டுஇன் தளத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த வாரம் நான் கூகுளிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டேன். விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய நான்காவது நாளில் பணிநீக்கம் குறித்த செய்தி வந்தது. நான் சோர்வாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறேன். ஏற்கனவே நீங்கள் சோகத்தில் இருக்கும் போது, முகத்தில் ஒருவர் அறைந்ததை போல உணர்ந்தேன். விடுப்பில் இருக்கும் போதே பணிநீக்கம் போன்ற மோசமான கதைகளை நிச்சயமாக கேள்விப்பட்டிருக்கிறேன். கூகுளில் ஆன்போர்டிங் சவாலானது மட்டுமின்றி நிறையவற்றை கண்டறிய வேண்டி இருக்கும்.
![]()
|
என் அம்மாவின் கீமோதெரபி சிகிச்சைக்கு நேரம் கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. அம்மா வாழ்க்கையின் கடைசி சில மாதங்கள் மிகவும் சவாலானவை என்பதால் கையாளும் போது மேலும் கடினமாக இருந்தது. நிறுவனத்திற்காக அதிக வேலை என இருக்காமல், அம்மாவுடன் நேரத்தை செலவிட உதவியதற்கு நன்றியுடன் உள்ளேன்.
பெரும் நிறுவனங்களில் பணிபுரிய அதிக வாய்ப்புகள் எப்போதும் இருக்கும். ஆனால் பெற்றோர்கள், ஒருமுறை மட்டுமே இறந்துவிடுவார்கள். மார்ச் மாத இறுதியில் புதிய வேலையைத் தேடத்தயாராக இருக்கிறேன். எனக்கு மிகவும் பொருத்தமான வாய்ப்புகள் இருப்பதாக நீங்கள் கருதினால், என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
![]()
|
லிங்க்டு இன் தளத்தில் இவரது பதிவுக்கு ஏராளமானோர் ஆறுதலுடன், உதவவும் தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளனர். பயனர் ஒருவர் "எல்லாவற்றிலிருந்தும் விலகிச் செல்ல உங்களுக்கு நேரம் கிடைத்ததில் மகிழ்ச்சி," எனவும், மற்றொரு பயனர், ”நீங்கள் எப்போதாவது பேசுவதற்கு யாராவது தேவைப்பட்டால், என்னை அழையுங்கள். நான் உங்களுக்கு முன்பின் அறியாதவன் என்று தெரியும். ஆனால் உங்களிடம் பேசுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.