வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாகப்பட்டினம்: பிரசித்திப் பெற்ற எட்டுக்குடி முருகன் கோவில் கும்பாபிஷேகம் இன்று(ஜன.,27) கோலாகலமாக நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் எட்டுக்குடியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற எட்டுக்குடி சுப்ரமண்யசுவாமி கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த 20 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள இடும்பன் கடம்பன் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூர்ணாஹூதி தீபாராதனைகள் நடைபெற்று வந்தன.

இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்ற பின்னர் மேளதாள வாத்தியங்களுடன் குடங்கள் கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டன. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயிலில் உள்ள கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மஹா கும்பாபிஷேக விழாவில், ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர்.