வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜம்மு: காஷ்மீரில் , பாத யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், இன்று காஷ்மீரில் ஒரு கி.மீ., தூரம் நடந்து சென்றார். அவரை பார்க்க ஏராளமானோர் குவிந்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லாததால் பாத யாத்திரை நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரியில் துவங்கிய ராகுலின் பாரத் ஜோடோ பாத யாத்திரை தற்போது காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வருகிறது. இன்று ஸ்ரீநகரை நோக்கி 20 கி.மீ., தூரம் ராகுல் நடந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது.

அவருடன் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லாவும் நடந்து சென்றார். சுமார் ஒரு கி.மீ., தூரம் நடந்து சென்ற நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பாத யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. பனிஹல் சுரங்கப்பாதையை ராகுல் கடந்த நிலையில், அவரை பார்ப்பதற்காக ஏராளமானோர் குவிந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக ராகுல் கூறுகையில், கூட்டத்தினரை கட்டுப்படுத்த வேண்டிய போலீசாரை எங்கும் காணவில்லை. நாங்கள் சுரங்கப்பாதையை கடந்த பிறகு, போலீசார் பாதுகாப்பு சீர்குலைந்தது. எனது பாதுகாப்பு சரியானதாக இல்லை. பாத யாத்திரையை நிறுத்த வேண்டியதாகி விட்டது. எனது பாதுகாவலர்களுக்கு எதிராக செயல்பட முடியாது என்பதால், பாத யாத்திரையை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. கூட்டத்தினரை கட்டுப்படுத்த வேண்டியது நிர்வாகத்தின் கடமையாகும். இவ்வாறு ராகுல் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் கூறுகையில், சுரங்கப்பாதையை கடந்த நிலையில், போலீஸ் பாதுகாப்பு திடீரென திரும்ப பெறப்பட்டது. இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும். சுமார் 15 நிமிடங்கள் பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இல்லை. இது பெரிய பாதுகாப்பு பிரச்னை. பாதுகாப்பு இல்லாமல், ராகுல் மற்றும் தொண்டர்கள் நடக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், காஷ்மீர் நிர்வாகம் கூட்டத்தினரை சரியாக கட்டுப்படுத்தாததுடன், பாதுகாப்பை திடீரென திரும்ப பெற்றது. கூட்டத்தினர் நடுவில் ராகுல் சுமார் 30 நிமிடம் சிக்கி கொண்டார். அங்கிருந்து அவரால் எங்கும் நகர முடியவில்லை. அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் ராகுல் அழைத்து செல்லப்பட்டார். பாத யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.