வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சிந்து நதி நீர் ஒப்பந்த விதிமுறைகளை பாகிஸ்தான் அடிக்கடி மீறுவதால், ஒப்பந்தத்தை திருத்த வலியுறுத்தி, அந்த நாட்டிற்கு மத்திய அரசு 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
சிந்து நதி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும், 1960ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் மூன்றாவது நபராக உலக வங்கி கையெழுத்திட்டுள்ளது.இந்த ஒப்பந்த விதிமுறைகளை, பாகிஸ்தான் அடிக்கடி மீறி வந்தது. இதையடுத்து, கடந்த 25ம் தேதி, சிந்து நதி நீர் பங்கீடு ஆணையத்தின் ஆணையர் வாயிலாக பாகிஸ்தானுக்கு, மத்திய அரசு சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.
இதில் கூறப்பட்டுள்ளதாவது:சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதில், இந்தியா எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது.ஆனால், ஒப்பந்த விதிமுறைகளை மீறுவது, நடைமுறைப்படுத்துவது போன்ற விஷயத்தில் பாகிஸ் தான் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றன.

இந்தியாவின் கிஷன்கங்கா மற்றும் ரடேல் நீர்மின் திட்டங்களுக்கான தொழில்நுட்ப ரீதியான பிரச்னைகளை ஆய்வு செய்ய, நடுநிலை நிபுணர் குழுவை நியமிக்கும்படி, 2015ல் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. அடுத்த ஆண்டே அந்த கோரிக்கையை பாக்., திரும்ப பெற்றதுடன், பிரச்னையை தீர்த்து வைக்கும்படி தீர்ப்பாயத்தை நாடியது.பாகிஸ்தானின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கை, சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்த விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதாக உள்ளது. எனவே, ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.