''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்ல, 'ஜூனியர்' எம்.ஜி.ஆர்., போட்டியிட, 'சீட்' கேக்கறா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''எம்.ஜி.ஆரோட வளர்ப்பு மகள் சுதா - விஜயன் தம்பதியின் ரெண்டாவது மகன் ராமச்சந்திரன்... ஆஸ்திரேலியாவுல இன்ஜினியரிங் படிச்சிருக்கற இவர், எம்.ஜி.ஆரோட ராமாவரம் ஆத்துல தான் குடியிருக்கறார் ஓய்...
''சினிமாவுல கூட நடிச்சிருக்கார்... போன சட்டசபை தேர்தல்லயே, அ.தி.மு.க.,வுல, ஆலந்துார், பல்லாவரம், ஆண்டிப்பட்டி தொகுதிகள்ல சீட் கேட்டவரை, தலைமை கண்டுக்கல... ஆறுதல் பரிசா, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணை தலைவர் பதவி குடுத்தா ஓய்...
''இப்ப, 'ஈரோடு கிழக்கு தொகுதியில போட்டியிடும், ஈ.வெ.ரா., பேரன் இளங்கோவனை எதிர்த்து, எம்.ஜி.ஆர்., பேரன் ராமச்சந்திரனை நிறுத்தினா சரியா இருக்கும்'னு அவரது தரப்பினர், 'லாஜிக்' பேசறா...
''அவர் போட்டிஇட்டா, பன்னீர்செல்வம் தரப்பும் வேட்பாளரை நிறுத்தாம விட்டுக் கொடுக்க வாய்ப்பிருக்குன்னும் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பெண் போலீஸ் அதிகாரியை கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில, காதல் வலையில சிக்கி வீட்டை விட்டு ஓடிப் போகும் சிறுமியர் சம்பந்தமான வழக்குகள், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துல பதிவாகுதுங்க... அந்த வழக்குகள்ல, சிறுமியர் வாக்குமூலத்தை பதிவு செய்யாம, சம்பந்தப்பட்ட இளைஞர் மேல, 'போக்சோ' வழக்கு பதிவு செய்றாங்க...
''சிறுமியரின் குடும்பத்தினரிடம், பெரிய தொகையை வாங்கிட்டு, ஸ்டேஷன் பெண் அதிகாரி, இப்படி தன்னிச்சையா செயல்படுறதா புகார் சொல்றாங்க...
''இரவு ரோந்து பணிக்கு போகும் அதிகாரி, போலீஸ் வேலையிலயே இல்லாத இளைஞரை ஜீப் ஓட்ட அழைச்சிட்டு போறாங்க...
''அதிகாரிக்கு வசூல் செஞ்சு தர்றது தான் அந்த இளைஞரோட, 'டூட்டி'யாம்... ஓசூருக்கு வந்த கொஞ்ச காலத்துலயே, பல லட்சம் ரூபாய்ல சொகுசு, 'பிளாட்' வாங்கி, 'ராணி' மாதிரி வசிக்கிறாங்க... அவங்க மேல அடுக்கடுக்கா புகார் போனாலும், எஸ்.பி.,யும், சேலம் டி.ஐ.ஜி.,யும் கண்டுக்கிறது இல்லைங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''நிம்மதியாவே இருக்க விட மாட்டாங்களான்னு புலம்புதாவ...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''அ.தி.மு.க., ஆட்சியில, ஆவின் நிறுவனத்துல, 236 பேர் புதுசா வேலையில சேர்ந்தாவ... ஒவ்வொரு பணிக்கும், 12 முதல், 40 லட்சம் ரூபாய் வரை கைமாறிட்டதா புகார் வந்துச்சு வே...
''தி.மு.க., ஆட்சி விசாரணை நடத்தி, சமீபத்துல இதுல, 201 பேரை, 'டிஸ்மிஸ்' செஞ்சிட்டாவ... ஆனா, அந்த டிஸ்மிஸ் உத்தரவுக்கு ஐகோர்ட் தடை போட்டுட்டு... டிஸ்மிஸ் ஆனவங்க திரும்பவும் பணிக்கு திரும்பிட்டாவ வே...
''ஆனா, ஆவின் முக்கிய புள்ளி தரப்புல இருந்து, இவங்களுக்கு நெருக்கடி தர்றாவ... பணியில தொடர மறுபடியும் பேரம் நடக்கு... இந்த விவகாரத்தை, முதல்வர் கவனத்துக்கு கொண்டு போக, ஆவின் அலுவலர்கள் சங்கம் முடிவு செஞ்சிருக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.