மங்களூரு,-''தி.மு.க., போன்று பொய் வாக்குறுதிகளை அளிக்கும் காங்கிரசை மக்கள் நம்ப வேண்டாம். விழிப்புடன் இருப்பது அவசியம்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தட்சிண கன்னட மாவட்டம், பன்ட்வால் தாலுகா பி.சி.ரோட்டில் பா.ஜ.,வின் கிராம விகாஸ் யாத்திரை நிறைவு நாள் மாநாடு நேற்று நடந்தது.
பன்ட்வால் பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜேஷ் நாயக் ஏற்பாடு செய்த மாநாட்டில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அவருக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து, இரண்டு கி.மீ., துாரம் திறந்த ஜீப்பில் அழைத்து வரப்பட்டார்.
அவர் பேசியதாவது:
பன்ட்வால் டவுன், கடந்த காலங்களில் மதவாத கலவரங்களால் உலுக்கியது. நான்கு ஆண்டுகளாக அமைதி பூமியாக திகழ்கிறது. அதிகமான வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன. இப்பகுதி மக்கள் புத்திசாலிகள் என்பதற்கு பெயர் பெற்றவர்கள்.
இந்த நேரத்தில் தமிழகத்தின் அரசியலை பற்றி இங்கு கூற வேண்டி உள்ளது. சமீபத்தில் கர்நாடகா வந்த காங்கிரசின் பிரியங்கா, அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் தருவதாக கூறினார். இது போன்று தான், தமிழகத்தில் தி.மு.க.,வும், காங்கிரசும் சேர்ந்து ரேஷன் கார்டுக்கு ௧,௦௦௦ ரூபாய் தருவதாக கூறினர்.
ஆட்சி அமைந்து, 21 மாதங்கள் ஆகியும் இதுவரை கொடுக்கவில்லை. தி.மு.க., பொய் சொல்லி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது. இது போன்று கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது.
இத்தகைய பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம். விழிப்புடன் இருத்தல் அவசியம். ஆட்சிக்கு வந்தவுடன் கர்நாடகாவை ஏ.டி.எம்., இயந்திரமாக பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கொள்ளை அடிக்கும் பணத்தை அடுத்த லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
மீண்டும் கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சிக்கு வருவது உறுதி. கடந்த முறையை விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ., வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.