புதுடில்லி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரின் வேட்பு மனுவில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமிகையெழுத்திடுவதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ள மறுத்ததால்,வேட்பாளர் அறிவிப்பில் குழப்பம் நிலவுகிறது. இதை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க, நாளை மறுதினம் கோரிக்கை விடுக்கும்படி, பழனிசாமி தரப்புக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 11ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலராக முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
அதுவரையிலும் அக்கட்சியில் இருந்து வந்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. இதனால், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் பதவியை இழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, 'பொதுக்குழு செல்லாது' என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து பழனிசாமி தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 'பொதுக்குழு கூட்டம் செல்லும்' எனக் கூறி, பழனிசாமிக்கு ஆதரவாக உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு தொடர்ந்து ஐந்து நாட்கள் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சமீபத்தில் ஒத்திவைத்தது.
இந்த நேரத்தில், 'ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்., 27ல் நடத்தப்படும்' என, தேர்தல் ஆணையம் அறிவித்தது. 'இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜன., 31ல் துவங்குகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு பிப்., 7 கடைசி நாள்' என, தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரை நிறுத்த கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளர் தேர்வில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி ஈடுபட்டார். அந்த நேரத்தில், சற்றும் எதிர்பாராத வெடிகுண்டை தேர்தல் ஆணையம் வீசியது.
'பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலராக தேர்ந்தெடுத்த பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் இன்னும் தீர்ப்பு வெளியாகாத நிலையில், அக்கட்சி வேட்பாளரின் வேட்பு மனுவில் பழனிசாமி கையொப்பமிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது' என, தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது, அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பில் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த அறிவிப்பை எதிர்த்து பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் சி.ஏ.சுந்தரம் மற்றும் பாலாஜி ஸ்ரீனிவாசன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். அதன் விபரம்:
பழனிசாமியின் கையெழுத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடுவதற்கான வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தால் முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, அ.தி.மு.க., வேட்பாளரின் வேட்பு மனுவில் பழனிசாமி கையெழுத்திடுவதை ஏற்றுக் கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அல்லது பொதுக்குழு வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
இல்லையெனில், அ.தி.மு.க., எனும் மாபெரும் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பையும், பிரச்னைகளையும் இது உருவாக்கிவிடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான பிப்., 7ம் தேதிக்கு முன், பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்க முயற்சிக்கிறோம். ஒருவேளை தீர்ப்பு தள்ளிப்போனால், இடைக்கால நிவாரணம் அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும். இதை அவசர வழக்காக விசாரிக்க கோரி நாளை மறுநாள் முறையான கோரிக்கையை நீதிமன்றத்தில் வைக்கவும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து, இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பில் அ.தி.மு.க.,வில் நிலவி வரும் குழப்பம் 30ம் தேதி தீருமா என, தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.