'பார்லி.,க்கு அதிக நாட்கள் வருகை தந்து சாதனை படைத்த எம்.பி.,க்கள்' என்ற செய்தி சமீபத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர்களின் வருகை குறித்த உண்மை தன்மை வேறு மாதிரியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த குளிர்கால கூட்டத்தொடரில், 'லோக்சபாவுக்கு அதிக நாட்கள் வருகை தந்து, தமிழக எம்.பி.,க்கள், சாதனை படைத்துள்ளனர்' என சமீபத்தில் செய்தி வெளியானது. இது, இரண்டு தனியார் நிறுவனங் களால், லோக்சபா செயலக விபரங்களுடன், கூடுதல் ஜிகினாக்களை சேர்த்து வெளியான செய்தி.
இவ்வாறு செய்தி வெளியிடுவதால், எம்.பி.,க்களுடனும், பார்லி., வட்டாரங்களிலும் தொடர்பையும், நெருக்கத்தையும் ஏற்படுத்தி, 'லாபி' செய்ய முடியும் என்பதால், இது போன்ற தனியார் அமைப்புகள் இந்த 'சர்வே'க்களை வெளியிடுகின்றன.
புள்ளிவிபரங்கள்
இந்த செய்திகளில் உறுதியான புள்ளிவிபரங்கள் எதுவும் இருப்பதில்லை. பார்லி., விதிகள், நடைமுறைகள், அதன் அலுவல்கள் குறித்த தன்மை ஆகியவற்றை அறிந்தால் மட்டுமே, இதன் உண்மை தன்மையை தெரிந்து கொள்ள முடியும்.
சபைக்கு தவறாமல் வருகை தரும் பல எம்.பி.,க்கள், தங்களது தொகுதி பிரச்னைகளுக்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திப்பது, நுாலகத்தில் உரை தயாரிப்பது போன்ற காரணங்களால் சபைக்கு வர முடியாமல் 'ஆப்சென்ட்' ஆவதுண்டு.
கேள்வி, விவாதம், அறிக்கை தாக்கல் போன்றவற்றில் வாய்ப்பு பெற்ற 99 சதவீதம் பேர், சபையில் இருப்பதும், அலுவல்கள் இல்லாத எம்.பி.,க்கள் தங்களது மற்ற பணிகளுக்காக சென்றுவிடுவதும் உண்டு.
இந்நிலையில், 100 சதவீத வருகை தந்து சாதனை, அதிக கேள்வி கேட்ட எம்.பி.,க்கள் என்றெல்லாம் செய்திகள் பரப்பப்படுகின்றன. இங்கே எம்.பி.,க்களின் வருகை பதிவேடு, பள்ளி மாணவர்களுக்கான வருகைப்பதிவேடு போன்றதல்ல.
இவர்கள் காலையில் வருகை பதிவேட்டில் கையெழுத்துப் போட்ட பின், சபைக்குள் வருகிறாரா; வந்தாலும் இடைவெளியின்றி சபை நடவடிக்கைகளில் பங்கேற்கிறாரா என்பதை யாராலும் அறுதியிட்டு கூற முடியாது.
காரணம் பல எம்.பி.,க்கள் காலை 11:00 மணிக்கு கையெழுத்துபோட்ட பின், சபைக்குள் நுழையாமல் அடுத்த அரை மணி நேரத்தில், தங்கள் தொகுதிக்கு செல்ல விமான நிலையத்தில் இருப்பர்.
'பயோமெட்ரிக் சிஸ்டம்'
இந்நிலையில், இந்த எம்.பி.,க்களை 'வருகை பதிவேட்டில் வெற்றிகரமாக கையெழுத்திட்ட சாதனையாளர்கள்' என்று வேண்டுமானால் கூறலாம். இது, சபை நடத்தை விதிமுறைகளை அறிந்த, பார்லி.,க்கு வரும் செய்தியாளர்கள் மட்டுமே அறிந்த உண்மை.
இந்நிலையில், எம்.பி.,க்களின் வருகையில் உள்ள நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, புதிய பார்லி., கட்டடத்தில், அவர்களின் வருகை, வெளியேறுவதை பதிவிட, பிரதமர் மோடி உத்தரவின்படி, 'பயோமெட்ரிக் சிஸ்டம்' வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேள்விகளை தயாரித்து தர பார்லி.,க்கு உள்ளேயும், வெளியேயும் 'ஆஸ்தான நிலைய வித்துவான்கள்' பலர் உள்ளனர். உரிய தட்சணையை தந்துவிட்டால், இவர்களிடமிருந்து விதவிதமான கேள்விகளை பெறலாம்.இவர்களின் கைங்கர்யத்தால், பார்லி.,யின் கேள்வி - பதில் குறிப்பேடு களிலிருந்து, நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் கேட்கப்பட்ட பல கேள்விகள், 'பட்டி டிங்கரிங்' செய்யப் பட்டு மீண்டும் உயிர்த்தெழும்.நூற்றுக்கணக்கான கேள்விகள் பொத்தாம் பொதுவாக இருப்பதும், ஒரே கேள்வியை ஒன்றுக்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் கேட்பதும், தென்மாநில எம்.பி.,க்கள் சிலர், சம்பந்தமே இல்லாமல், வடகிழக்கு மாநிலங்கள் குறித்த கேள்விகளை கிளப்புவதும் இப்படித்தான்.
சில எம்.பி.,க்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜென்ட்கள் தரும் கேள்விகளை அப்படியே கேட்டு மாட்டியதால், 'கேள்வி கேட்க எம்.பி.,க்கள் லஞ்சம்' என்ற விவகாரம் வெடித்து சர்ச்சையானது.ஆக, மண்டபத்தில் எழுதி தரப்படும் கேள்விகள், எம்.பி.,யின் பெயரோடு பார்லி.,யின் குறிப்பேடுகளில் பதிவாகி, அவரும் நிறைய கேள்விகளை கேட்டவராகி விடுவார். இறுதியில் இம்மாதிரி தனியார் நிறுவனங்களால் சாதனையாளராகவும் ஆகிவிடுவார். இதுதான் சில எம்.பி.,க்களின் உண்மையான 'சாதனை' கதை.
- நமது டில்லி நிருபர் -