வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பதி,--திருமலை ஏழுமலையான் கோவிலுக்கான தரிசன முன்பதிவு, அங்கு அறைகள் முன்பதிவு மற்றும் நன்கொடைகள் அளிப்பது ஆகிய சேவைகளை உள்ளடக்கிய புதிய மொபைல் செயலியை தேவஸ்தானம் நேற்று காலை வெளியிட்டது.
![]()
|
திருமலைக்கு வரும் பக்தர்கள், தரிசனம் மற்றும் அறைகளுக்கான முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் தங்கள் வீட்டிலிருந்தபடியே செய்து கொள்ள வசதியாக, தேவஸ்தானம் புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதற்கு 'டிடி தேவஸ்தானம்' என பெயரிட்டுள்ளது. தற்போது, இந்த செயலி சோதனை முறையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் நிறை, குறைகள் குறித்து பக்தர்களிடம் கருத்து கேட்டு, இதை மேலும் மெருகேற்றி பக்தர்களுக்கு வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
இந்த செயலியை, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேற்று காலை வெளியிட்டு கூறியதாவது:
இதுவரை பக்தர்களுக்காக 'கோவிந்தா' என்ற செயலி இருந்தது. இது, நவீனப்படுத்தப்பட்டு புதிய சேவைகள் இணைக்கப்பட்டு, புதிய செயலியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி வாயிலாக பக்தர்கள், ஏழுமலையான் தரிசனம், தங்குமிடம், அங்கபிரதட்சணம், ஆர்ஜித சேவைகள் போன்றவற்றை முன்பதிவு செய்யலாம். இந்த செயலியில் இருந்து நன்கொடைகளும் அனுப்பலாம்.
![]()
|
இதில் உள்ள தகவல் குறிப்புகள் வாயிலாக ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் உற்சவ விபரங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். அடுத்து, எஸ்.வி.பி.சி., என்ற தேவஸ்தான 'டிவி'யின் ஒளிபரப்பு களையும் பக்தர்கள் கண்டு தரிசிக்கலாம்.
இந்த செயலியில், திருமலை தொடர்பான அனைத்து தகவல்களும் உள்ளதால், பக்தர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க முடியும். இதன் செயல்பாடுகள் குறித்து பக்தர்களிடம் இருந்து ஆலோசனைகள் பெற்று, மேலும் மெருகேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement