வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க விமானப்படையில் கர்னலாக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா சாரிக்கு, பிரிகேடியர் ஜெனரலாக பதவி உயர்வு தர, அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதை சேர்ந்தவர் ராஜா சாரி, 45. இவரது தந்தை ஸ்ரீனிவாஸ் சாரி, தன் இளம் வயதில் மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்தார். படிப்பு முடித்து அமெரிக்காவிலேயே குடியேறினார்.
இவரது மகன் ராஜா சாரி அமெரிக்காவிலேயே பிறந்து இங்கேயே படித்தார். அதனால் அமெரிக்க பிரஜையாகவே வளர்ந்தார்.

மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி பயின்ற ராஜா சாரி, மேரிலாண்டில் பைலட் பயிற்சி பெற்றார்.
பின், அமெரிக்க விமானப் படையில் சேர்ந்தவர், 461வது படைப் பிரிவின் கமாண்டராகவும், அமெரிக்காவின் முக்கிய போர் விமானங்களில் ஒன்றான, 'எப் - 35' யின் ஒருங்கிணைந்த பரிசோதனை பிரிவின் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
கடந்த 2020ல், சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடந்து வரும், 'ஸ்பேஸ் எக்ஸ்' திட்டத்தின் கமாண்டராக, நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிலையத்தால் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இந்நிலையில், ராஜா சாரிக்கு விமானப் படை பிரிகேடியர் ஜெனரலாக பதவி உயர்வு தர, அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இந்த பரிந்துரை, அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலுக்கு பிறகே உறுதி செய்யப்படும்.