பழநி:பழநி மலை முருகன் கோவில் கும்பாபிஷேகம், பக்தர்களின் 'அரோகரா' கோஷம் விண்ணை முட்ட, நேற்று கோலாகலமாக நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம்,பழநி மலை முருகன் கோவிலில், 2006ல்கும்பாபிஷேகம் நடந்த நிலையில், 16 ஆண்டுகளுக்கு பின், நேற்றுகும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி டிச., 25ல் முகூர்த்தகால் நடப்பட்டது. ஜன., 23 முதல் வேள்வி பூஜை துவங்க தினமும் இரண்டு கால பூஜைகள் நடந்தன.
நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, 8ம் கால யாக பூஜை முடிந்தது. இதன்பின், 108 சிவாச்சாரியார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் நடந்தன.

நேற்று நடந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 'ஆன்லைன்' பதிவு வாயிலாக குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட, 2,000 பக்தர்கள், கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்பட்ட, 4,000 பக்தர்கள் என, 6,000 பேர் அதிகாலை, 3:00 மணி முதல் கோவிலுக்குள்அனுமதிக்கப்பட்டனர்.
காலை, 7:00 மணிக்கு பெருநிறை வேள்வி, தீபாராதனை, கட்டியம் நடந்தது. கந்தபுராணம், பன்னிருதிருமுறை ஓதப்பட்டது.
காலை, 8:10 மணிக்கு ராஜ கோபுரம், தங்ககோபுரம், ஈஸ்வரர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட, 11 கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்ய சிவாச்சாரியார்கள் புனித நீருடன் வந்தனர்.
காலை, 8:46 மணிக்கு மேளதாளங்கள் முழங்க தங்க கோபுரத்தில் இருந்த ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ., செந்தில்குமார் மூவரும் சேர்ந்து பச்சைக்கொடி அசைத்தனர்.
அப்போது, ஒரே நேரத்தில் தங்ககோபுரம், ராஜகோபுரம் உள்ளிட்ட, 11 கோபுரங்களில் உள்ள கும்ப கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.

அப்போது, பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை முட்டியது. கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. குழாய்களில் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
பின், ஹெலிகாப்டரில் தங்க கோபுரம், ராஜ கோபுரத்தில் மலர்கள் துாவப்பட்டன. மீண்டும், 9:00 மணிக்கு 2வது முறையாக ஹெலிகாப்டரில் மலர் துாவப்பட்டது.
காலை, 9:15 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்க பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்; பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கூட்டம் அதிகமாக இருந்ததால் ரோப் கார், வின்ச் பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, 21 நீதிபதிகள், பழநி மலை முருகன் கோவிலுக்கு வந்திருந்தனர்.

பழநி கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோவிலில், தைப்பூச திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.ஜன., 30 முதல் பிப்., 3 வரை தினமும் காலையில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி தந்த பல்லக்கில் திருவீதி உலா நடைபெறும். மாலை வெள்ளி ரிஷபம், வெள்ளி காமதேனு, வெள்ளி யானை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
ஆறாம் நாளான பிப்., 3ல் தந்த பல்லக்கில்திருவீதி உலா நடைபெறும். இரவு, 7:00 மணிக்கு மேல், 8:00 மணிக்குள் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெறும். இரவு, 9:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.தைப்பூச தினமான பிப்., 4 காலை, 5:00 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியானில் சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெறும்.மதியம், 11:00 மணிக்கு மேல், 12:00 மணிக்குள் திருத்தேரில் எழுந்தருளல், மாலை, 4:30 மணிக்கு திருத்தேரோட்டம், தேர்க்கால் பார்த்தல் நடைபெறும்.
பிப்., 5ல் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, பிப்., 6ல் தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். பிப்., 7 இரவு, 7:00 மணிக்கு தெப்பத்தேர் திருவிழா, இரவு, 11:00 மணிக்கு கொடிஇறக்குதலுடன் தைப்பூச உற்சவம் நிறைவு பெறும்.

*அனுமதி சீட்டு வைத்திருந்தவர்கள் மட்டும் நேற்று அதிகாலை, 3:00 மணியில் இருந்து மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். அனுமதி சீட்டு இல்லாத பக்தர்கள் பாத விநாயகர் கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த, 'ஷெட்'டில் காத்திருந்தனர். அவர்கள் காலை, 11:00 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
* பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி, தெய்வானையுடன் பஸ் ஸ்டாண்ட், திருஆவினன்குடி கோவில் வழியாக பாதவிநாயகர் கோவிலுக்கு காலை, 8:15 மணிக்கு மயில் வாகனத்தில் முருக பெருமான் வந்தார்.
* திருக்கல்யாண வைபம் நிறைவுற்றதும் கிரிவலத்துடன் மீண்டும் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு மலையேறும் மயில் வாகன பெருமான் திரும்பினார்.
* சரவணப்பொய்கையில் இருந்து பல இடங்களில் அனுமதி சீட்டை பரிசோதித்த பின்னரே பக்தர்களை போலீசார் அனுமதித்தனர். சரவணப்பொய்கை, திருஆவினன்குடி, பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில் ஏறும் இடம் என, பல இடங்களில் தடுப்புகளை அமைத்து அனுமதி சீட்டை போலீசார் சோதனை செய்தனர்.
* கிரிவலப்பாதை, பாதவிநாயகர் கோவில், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பெரிய, சிறிய எல்.இ.டி., திரைகளில் கும்பாபிஷகத்தை பக்தர்கள் நேரலையில் கண்டனர்.
* பாதவிநாயகர் கோவில், கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்டிருந்த குழாய்களால் பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது.
* கிரிவலப்பாதையில் பல இடங்களில் தன்னார்வலர்கள், பக்தர்கள் தங்கள் சார்பில் காலை, 5:30 மணியில் இருந்து அன்னதானம் வழங்கினர். பெரும்பாலான இடங்களில் சர்க்கரை பொங்கல், வடையுடன் பொங்கல், கேசரி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கும்பாபிஷேகம் நிறைவடைந்ததும் கோவில் நிர்வாகத்தால் அன்னதானம் வழங்கப்பட்டது.
வி.ஐ.பி., பாஸ் இல்லாமல் வாக்குவாதம்!
* அதிகமானோர் கோவில் நிர்வாகம் தரப்பில் வழங்கப்பட்ட பேட்ஜ்களை அணிந்திருந்தனர். அவர்களுக்கு கும்பாபிஷேகத்தை கோவில் மேல் தளத்திற்கு சென்று பார்க்க அனுமதிக்கவில்லை. ஆனால், தங்களை மேல் தளத்திற்கு அனுமதிக்க வேண்டும் என, ஆறாவது கேட் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி மேல் தளத்திற்கு அனுமதித்தனர்.
* கோபுர கலசங்களில் மலர் துாவ, இரண்டாவது முறையாக ஹெலிகாப்டர் வந்த போது பூ இருந்த சாக்கு பக்தர்கள் மீது விழுந்தது
* கும்பாபிஷேகத்தை காண வி.ஐ.பி.,களுக்கு கோவில் மேல் தளத்தில், 18 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் அனுமதி சீட்டை காண்பித்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
வட்டமடித்த 3 கருடன்கள்
* காலை 9:05 மணிக்கு மூன்று கருடன்கள் வானில் வட்டமிட்டன. இதை பார்த்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இது போல ஜன., 18ல் நடந்த கலச ஸ்தாபன நிகழ்ச்சியின் போதும் கோவிலை சுற்றி கருடன் வட்டமடித்தது.