வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கப்பல் போக்குவரத்து வழி
இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல்:
பொருளாதார நிலை மந்தமாக இருப்பதால், 'பேக்கிங் கிரெடிட்' மீதான வட்டி சலுகையை, நிலைமை சீராகும் வரையில், ஐந்து சதவீதம் வரை உயர்த்தி வழங்க வேண்டும். ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்கான நிதியை உருவாக்க வேண்டும். சர்வதேச சந்தைகளில் இடம்பெற ஏற்படும் செலவுகளுக்கு, 200 சதவீத வரிசலுகை வழங்க வேண்டும்.
'ஆத்ம நிர்பார்' திட்டத்தில், கன்ட்டெய்னர் தயாரிப்பு வசதியை செய்துள்ளது போல், இந்தியாவின் கப்பல் சரக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆண்டுக்கு, 50 பில்லியன் டாலர் வரை கப்பல் வாடகைக்கு செலவிடப்படுவதை குறைக்க, கப்பல் போக்குவரத்து வழியை உருவாக்க வேண்டும். திறன்பெற்ற தொழிலாளர்களை உருவாக்கி, கூடுதல் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
![]()
|
ஜி.எஸ்.டி.,யில் சலுகை
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் (சைமா) சங்க தலைவர் ஈஸ்வரன்:
மூலப்பொருட்கள் தடையின்றி கிடைத்தால் மட்டுமே, ஜவுளித்தொழில் சீராக நடக்கும். மத்திய அரசு, ஜவுளித்தொழிலுக்கு தேவையான பஞ்சு, நுால் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை நுால்விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
அரசு சலுகை வழங்குவது தொடர்வதுடன், பஞ்சு ஏற்றுமதி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். பருத்தியை, அத்யாவசிய பொருட்கள் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும். தொழில் நிலைய கருத்தில்கொண்டு, ஜி.எஸ்.டி., வரி செலுத்துவதில் சலுகை வழங்க வேண்டும். உள்நாட்டு சந்தைகளை பாதுகாக்க, வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
கூடுதல் கடன் வழங்கணும்!
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்:
அன்னிய செலாவணி மதிப்பில், ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது, பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தக கடன் வழங்க வேண்டும். வட்டி சமன் செய்யும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, ஏற்றுமதி மறு நிதியளிப்பு திட்டத்தில், கடன் நிலுவையில், 20 சதவீதம் கூடுதல் கடன் வழங்கி உதவ வேண்டும்.
திருப்பூர் தொழில் நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு, வர்த்தக மதிப்பில் ஒரு சதவீதத்தை ஒதுக்க வேண்டும். இறக்குமதியாகும் பொருள் மதிப்பில், ஆறு மடங்கு அதிகமாக ஏற்றுமதி இருந்தால், சுங்கவரி சலுகை கிடைக்கும். அவ்வாறு நடக்காதபட்சத்தில், சுங்கவரியை வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். தற்போது, இத்தகைய சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசு காலசூழ்நிலை கருதி, தகுந்த உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பட்ஜெட் அறிவிப்பு, திருப்பூரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என நம்புகிறோம்.
செயற்கை நுாலிழை
பின்னலாடை துணி உற்பத்தியாளர் (நிட்மா) சங்க தலைவர் ரத்தினசாமி:
திருப்பூர் தொழில் நகருக்கு, ரயில் மூலம் பயணிகள் வந்து செல்வது பல மடங்கு அதிகரித்துள்ளது. பட்ஜெட்டில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனை தரம் உயர்த்த நிதி ஒதுக்க வேண்டும். 'கூட்ஸ் ஷெட்' வஞ்சிபாளையத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். திருப்பூர் ரயில் பயணிகள் வசதிகளை மேம்படுத்த வேண்டும். நாட்டின், 6வது பெரிய தொழில் நகரமான திருப்பூரில், 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்; நகரின் உட்கட்டமைப்பு வசதிக்கு, நிதி ஒதுக்க வேண்டும்.
வரி விலக்கு வேண்டும்
திருப்பூர் ஏற்றுமதி வர்த்தக முகமை கூட்டமைப்பு (அபாட்) தலைவர் இளங்கோ:
திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகத்தில், வர்த்தக முகமைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெளிநாட்டு ஆர்டர்களை பெற்று, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறோம். வெளிநாட்டு ஆர்டர் பெறும் வர்த்தக முகமைகளுக்கு, ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. வர்த்தக வாய்ப்பை உருவாக்கும் முகமைகளுக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்களிக்க வேண்டும்.
'ஒன் டைம் சப்சிடி'
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன்:
கடந்த, 2019ம் ஆண்டு வரை, புதிய மெஷின்கள் இறக்குமதி செய்ய, வட்டி சலுகை கிடைத்தது. அதன்பின், புதிய திருத்தம் செய்ததால், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் பயன்பெற இயலவில்லை. இருப்பினும், 2019க்கு முன்பு, உரிமம் பெற்ற நிறுவனங்கள் வரிசலுகையுடன் மெஷின் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். 'டப்' திட்டம் புதிய பெயருடன் அமலுக்கு வந்தாலும், முன் போலவே, 'ஒன் டைம் சப்சிடி' என்ற முறையில் மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
திருப்பூர் சாய ஆலைகள், தினமும், 10 கோடி லி., தண்ணீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துகிறோம். உற்பத்தி செலவில், மின்சார செலவு, 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே, சோலார் மின்கட்டமைப்பு அல்லது காற்றாலை மின் கட்டமைப்பு நிறுவ மானிய உதவி வழங்க வேண்டும்.
ஒத்திவைக்க வேண்டும்
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம்:
மத்திய அரசு பட்ஜெட்டில், வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிப்பது போல், இம்முறை ஜவுளி தொழிலுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பஞ்சு விலை உயர்வு, நுால் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், சிறு குறு நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருப்பூரில் பாதிப்பு அதிகம். சிறுகுறு நிறுவனங்கள் மீண்டும் இயங்க ஏதுவாக, சிறப்பு கடன் திட்டங்களை அறிவிக்க வேண்டும். வங்கிகளின் கடன் வசூல் நடவடிக்கையை ஒத்தி வைக்க வேண்டும். 'லிங்க்ஸ்' தொழிலை பாதுகாக்க, பஞ்சு இறக்குமதி வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும். கொரோனா ஊரடங்கில் வழங்கியது போல், ஏற்றுமதி மறு நிதியளிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
இறக்குமதி வரி சலுகை
திருப்பூர் நிட் பிரின்ட்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த்:
மத்திய அரசு, தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான, 'டப்' திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். வங்கிக்கடன் வட்டி 12 சதவீதம் இருப்பதால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வட்டி சலுகை அறிவிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதியாளர்கள் மெஷின் இறக்குமதி செய்தால் வரிசலுகை கிடைக்கிறது; அதேபோல், மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பில் உதவும், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இறக்குமதிக்கும் வரி சலுகை வழங்க வேண்டும்.
'டப்' திட்ட மானியம்
திருப்பூர் 'ரைசிங்' சங்க தலைவர் ராமசாமி:
மத்திய பட்ஜெட்டில், திருப்பூர் ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும்; நிலைமை சீராகும் வரை, சில மாதங்கள் வரிவிலக்கு அளிக்க வேண்டும். 'டப்' திட்டத்தில், தொழில்நுட்பத்தை மேம்படுத்த மானியம் தொடர்ந்து வழங்க வேண்டும். பனியன் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கு, வங்கிக்கடன் மீது வட்டி சலுகை வழங்க வேண்டும்.
'ஜாப் ஒர்க்' பிரிவுக்கு சலுகை
கம்ப்யூட்டர் எம்பிராய்டர்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்:
'கம்ப்யூட்டர் எம்பிராய்டரி' மெஷின்கள் இறக்குமதி செய்யும் போது, வரிச்சலுகை வழங்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, பொருளாதார மந்த நிலை நீடிக்கிறது; இதிலிருந்து மீண்டு வர, வட்டி சலுகை அவசியம் தேவை.
திருப்பூர் பனியன் தொழில் வளர்ச்சிக்காக, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்ற சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, மதிப்பு கூட்டும் 'ஜாப் ஒர்க்' பிரிவுகளுக்கு சலுகை வழங்க வேண்டும்.
![]()
|
நிபந்தனை தளர்த்த வேண்டும்
தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் (சிம்கா) சங்க தலைவர் விவேகானந்தன்:
தொழில்நுட்பத்தை மேம்படுத்தும், 'டப்' திட்டத்தை மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்த வேண்டும். பி.எல்.ஐ., திட்டத்தின், 10 கோடி என்பதை திருத்தி, இரண்டு கோடி வர்த்தகம் என்று அறிவித்து, நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். 'ஸ்லாப்' முறையில் அல்லாமல், உற்பத்தியின் அடிப்படையில் மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்த்தால், ஜவுளித்துறை சந்திக்கும் பல பிரச்னைகள் முடிவுக்கு வரும்.
பட்ஜெட்டில் சலுகை
தி நிட் காம்பாக்டர்ஸ் அசோசியேஷன் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி:
திருப்பூர் பனியன் தொழில், இதுவரை இல்லாத அளவுக்கு சோதனைகளை சந்தித்துள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தங்களது பாதிப்புகளை சமாளிக்க, தகுந்த உதவி செய்ய வேண்டுமென, பல்வேறு அமைப்புகளும், கடிதம் அனுப்பியுள்ளன. மத்திய அரசு, திருப்பூர் தொழில்துறையினரின் கோரிக்கையை பரிசீலித்து, பட்ஜெட்டில் சிறப்பு சலுகைகளை அறிவிக்க வேண்டும். குறிப்பாக, மானிய கடன் திட்டம் திருப்பூருக்கு அவசியம்.