வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, காங்கிரசுடன் இணைவதாக, அக்கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியானதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தார். அதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியை, மக்கள் நீதி மய்யம் இடைத்தேர்தல் பொறுப்பாளர் அருணாச்சலம் மற்றும் நிர்வாகிகள், நேற்று சந்தித்து பேசினர்.
இச்சந்திப்பு முடிந்த சில மணி நேரத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில், மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் இணையப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இதை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் மறுத்தார்.

அவர் கூறுகையில், ''இது 100 சதவீதம் தவறான தகவல். இடைத்தேர்தலில் மட்டுமே காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். யாருடன் கூட்டணி வைத்தாலும், மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கும். இணையதளத்தில் வெளியான செய்தி குறித்து விசாரித்து வருகிறோம்,'' என்றார்.
இந்நிலையில், இணையதளம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் சீர் செய்யப்படும் என்றும், கமல் கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.