வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கான, புதிய இணையதளத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் தற்போது, 66 மாநில பொதுத் துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றை கண்காணிக்க, நிதித் துறை சார்பில், www.ccfms.tn.gov.in என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலகத்தில் துவக்கிவைத்தார்.
மேலும், புத்தொழில் மற்றும் தொழில் துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக, 'தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியம்' துவக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியம், நிதித் துறை மற்றும் தொழில் துறை கூட்டு முயற்சியால் துவக்கப்பட்டுள்ளது. இதை நிர்வகிக்கும் பொறுப்பு, உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிதியம் சார்பில் முதலீடுகள் வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஐந்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றுக்கு முதலீடு அனுமதி கடிதங்களை, முதல்வர் நேற்று வழங்கினார்.