வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி, ஏழை மக்களுக்கு இலவச வேட்டி - சேலையை வழங்கவில்லை என, அரசுக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், 1983ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழியே, இலவசமாக வேட்டி - சேலை வழங்கப்பட்டது. இந்தாண்டு இலவச வேட்டி - சேலை வழங்க, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பத்து வடிவமைப்புகளில் சேலை; ஐந்து வடிவமைப்புகளில் வேட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவற்றை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வினியோகிக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக, கடந்த நவம்பர் மாதம் செய்திகள் வந்தன. இன்று பொங்கல் பண்டிகை முடிந்து, 10 நாட்களுக்கு மேலாகியும், இலவச வேட்டி, சேலைகள் இன்னமும் வழங்கப்படவில்லை. இது கண்டனத்துக்கு உரியது.

பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், இந்த ஆண்டு வேட்டி - சேலை வழங்கப்படுமா என்ற சந்தேகம், மக்கள் இடையே ஏற்பட்டுள்ளது. இதை தெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது.
எனவே, முதல்வர் உடனடியாக தலையிட்டு, இந்த ஆண்டுக்கான இலவச வேட்டி, சேலைகளை, ரேஷன் கடைகள் வழியே வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும்காலங்களில், பொங்கல் பண்டிகைக்கு முன், வேட்டி, சேலைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதை, உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.