வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-''கோவில்கள் குறித்த தவறான பார்வை, கம்பீரமான நம் பாரம்பரியத்தை மட்டுமின்றி, நம் பண்பாட்டையும், அடையாளத்தையும் கூட அழித்துவிடும். நம் கோவில்களை, அவற்றின் முழுமையில் நாம் பாதுகாக்க வேண்டும்,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார்.
![]()
|
குடியரசு தின விழாவையொட்டி, அவர் ரேடியோவில் பேசியதாவது:
நம் மகத்தான கடந்த காலத்தை எண்ணி, நாம் பெருமைப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு மிக்க பல்வேறு படையெடுப்புகளும், காலனித்துவங்களும், நமது இடங்களுக்கும், பொருட்களுக்கும், சேதத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
ஆனால், நம் பண்பாட்டையோ, ஆன்ம உணர்வுகளையோ, ஆன்மிகத்தையோ, அவற்றால் சிதைக்க முடியவில்லை. பாரதத்தின் பெருமிதத்தை மீண்டும் தழைக்கச் செய்வது, நம் கடமை.
உலகளாவிய உறவு
புதிய இந்தியாவின் எழுச்சியில், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் வம்சாவளியினருக்கும், மிக முக்கியமான பங்கு உள்ளது. இந்த ஆண்டு 'ஜி - 20' தலைமை பீடத்தில் இந்தியா உள்ளது.
நம் உலகளாவிய உறவு களை உறுதி செய்து கொள்ள, பல்வேறு நாடுகளின் குடிமை சமூகங்களோடு, நம் இணக்கங்களை செம்மைப்படுத்திக் கொள்ள இது நல்வாய்ப்பு. இத்தகைய செயல்பாடுகளை நிறைவேற்ற, அயல்வாழ் தமிழரே சரியானவர்கள்.
பிரதமராக மோடி பொறுப்பேற்றதில் இருந்து, இலங்கையில் உள்ள தமிழர்கள் நலன் மீது, தனிக் கவனம் செலுத்தி வருகிறார். மத்திய அரசின் தளரா முயற்சிகளின் விளைவாக, இன்றளவில் எந்த இந்திய மீனவரும், இலங்கை சிறையில் இல்லை.
தமிழ் மொழி மேம்பாட்டுக்கான, பிரதமரின் முயற்சி காரணமாக, நாடு முழுதும் தமிழ் மொழி குறித்த விழிப்புணர்வு அதிகப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தில், நீதி வழங்கல் மற்றும் வழக்காடலுக்கான மொழியாக, தமிழை நிலைப்படுத்த, இந்திய அரசு முயன்று வருகிறது.
நாடெங்கும், 215க்கும் மேற்பட்ட ஜி - 20 நிகழ்வுகள் நடக்க உள்ளன. தமிழகத்திலும், இந்நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. தமிழகத்தின் பெருமைகளை பிறருக்கு எடுத்துக்காட்டும் வாய்ப்புகளாக, இந்நிகழ்ச்சிகள் விளங்கும்.
![]()
|
புதிய இந்தியாவின் உதயத்தையும், எழுச்சியையும் விரும்பாத புற அழுத்தங்களும், உள்ளார்வ குழுக்களும் உள்ளன. பிரிவினை மற்றும் கற்பனை சிக்கல்களை உருவாக்கியும், உயர்த்தி பிடித்தும், நம் வளர்ச்சியின் வேகத்தை குறைக்க முயல்கின்றன.
இவற்றில் சில அமைப்புகள், பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடுகின்றன. 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' இப்படிப்பட்ட பயங்கரவாத அமைப்பு. தமிழகத்தில் இந்த அமைப்பின் இருப்பு சற்றே வலிமையானது.
இந்த அமைப்புக்கு, மத்திய அரசு தடை விதித்ததும், பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தும் துணிச்சல், இதற்கு இருந்தது.
சட்ட அமலாக்க முகமைகள், இப்படிப்பட்ட அமைப்பை, மிகக் கவனமாக கண்காணித்து ஒடுக்க வேண்டும். நம் குடிமக்களும், கவனமாகவும், விழிப்போடும் இருக்க வேண்டும்.
நியாயம் அற்றது
பயங்கரவாத செயல்பாடுகள் குறித்த தகவல்களோ, செய்திகளோ தெரிந்தால், சந்தேகம் ஏற்பட்டால், சட்ட முகமை களுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்.
நம் பண்டைய கோவில்கள், நம் பாரம்பரிய பெருமைகள். இவை நம் அடையாளமும் கூட. நம் பண்பாட்டின் விளை நிலங்களும், ஊற்றுக் கண்களும் கோவில்களே.
கோவிலின் ஆன்மா, ஆன்மிகம், நாட்டியம், இசை, பண்கள், பாடல்கள் உள்ளிட்ட, தமிழ் கலை மற்றும் தமிழ் பண்பாட்டின் ஆன்மாவும், ஆதாரமும் ஆன்மிகம் தான். நம் கோவில்களை, கலை பண்பாட்டு இடங்களாக மட்டுமே சிலர் காண்கின்றனர். இது, மிகவும் நியாயம் அற்றது.
ஆன்மிகம் இல்லை என்றால், கோவிலில் ஆன்மா இல்லை. ஆன்மா இல்லாத உடல் வெற்று சடலம். அப்படித்தான் ஆன்மிகம் இல்லாத ஆலயங்கள்.
கோவில்கள் குறித்த தவறான பார்வை, கம்பீரமான நம் பாரம்பரியத்தை மட்டுமின்றி, நம் பண்பாட்டையும், அடையாளத்தையும் கூட அழித்துவிடும். நம் கோவில்களை, அவற்றின் முழுமை யில் நாம் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, கவர்னர் பேசினார்.