எம்.எல்.ஏ.,க்கு கொலை மிரட்டல்
--அ.தி.மு.க., நகர செயலாளர் மீது வழக்கு
ராஜபாளையம்: ராஜபாளையம் எம்.எல்.ஏ., தங்கபாண்டியனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அ.தி.மு.க., நகர செயலாளர் மீது சேத்துார் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
ராஜபாளையம் நகர் வடக்கு அ.தி.மு.க., செயலாளர் முருகேசன். தேவதானத்தில் ஜன. 21ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் ராஜபாளையம் தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கபாண்டியனை அசிங்கமாக பேசியும், கொலை மிரட்டல் விடுத்தும், ஜாதிகளுக்குள் பிரிவினை ஏற்படும் வகையில் பேசியதாக மூன்று பிரிவுகளின் கீழ் சேத்துார் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
சீட்டு மோசடி: அலுவலகம் முற்றுகை
தளவாய்புரம்: தளவாய்புரத்தை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி, செல்வராஜ். இவர்களோடு சேர்ந்து ஏழு பேர் சீட்பண்ட் நடத்தி வந்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த 85 நபர்கள் பல லட்சம் வரை பணம் செலுத்தி திரும்ப வராததால் பாதிக்கப்பட்டவர்கள் பழனிச்சாமி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தளவாய்புரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
டூவீலர் மீது கார் மோதல்: பெண் பலி
காரியாபட்டி: அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் செல்வி 30, லட்சுமணன் 26. இருவரும் விருதுநகர் சின்னவள்ளிகுளத்தில் உள்ள லோன் சென்டரில் வேலை பார்த்து வந்தனர். நேற்று மதுரையில் நடந்த நண்பரின் திருமணத்திற்கு டூவீலரில் சென்று, (ஹெல்மெட் அணியவில்லை) வீடு திரும்பினர். கல்குறிச்சி சமத்துவபுரம் அருகே சென்ற போது பின்னால் அ. முக்குளம் அருகே வந்தவாசியை சேர்ந்த சிவக்குமார் 45 ஓட்டி வந்த கார் மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் செல்வி இறந்தார். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் பெண் காயம்
சிவகாசி: பேர் நாயக்கன்பட்டி சேதுபதி நகரை சேர்ந்தவர் சுசிலா 37. இவர் கடைக்குச் சென்று விட்டு, வீட்டிற்கு பேர் நாயக்கன்பட்டி முனீஸ்வரன் கோயில் அருகே நடந்து வரும்போது வெம்பக்கோட்டை கோமாளிப்பட்டி அரவிந்த்குமார் ஓட்டி வந்த டூ வீலர் மோதியதில் காயமடைந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம்பெண் பலி
சிவகாசி: லிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் இசக்கியம்மாள் 23. சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர், ஜன. 25 ல் தனது வீட்டில் சமையல் செய்யும் போது ஆடை மீது தீப்பற்றியதில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
அரசு ஊழியர் பலி
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி பசும்பொன் நகரை சேர்ந்தவர் நாகரத்தினம், 58, இவர் அருப்புக்கோட்டை வட்டார மருத்துவ மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் பைக்கில் (ஹெல்மெட் அணியவில்லை) ராமநாயக்கன்பட்டி சென்று விட்டு திரும்பும் பொழுது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.--
மது பாட்டில் பறிமுதல்: 46 பேர் கைது
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 46 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் வழக்கம் போல் பல இடங்களில் மது விற்பனை நடந்தது. இதை தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனைகளில் 46 வழக்குகள் பதிந்து 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 1540 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.