மூணாறு: காட்டு யானைகளிடம் இருந்து பலரை காப்பாற்றிய தற்காலிக வாச்சர் சக்திவேல் காட்டு யானைகளிடம் சிக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை அருகே கோழிப்பனைகுடியைச் சேர்ந்த சக்திவேல் 51, வனத்துறை தற்காலிக வாச்சராக பணியாற்றினார். அவர் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதில் கைதேர்ந்தவர். கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பூப்பாறை அருகே சமீபத்தில் ரோட்டோரம் நின்ற தாக்குதல் சுபாவம் கொண்ட அரிசி கொம்பன் எனும் ஆண் காட்டு யானையை சாதுர்த்தியமாக பேசி காட்டிற்குள் விரட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. சக்திவேலை பலரும் பாராட்டினர்.
இந்நிலையில் பூப்பாறை அருகே பண்ணியாறு எஸ்டேட் பகுதியில் இரு நாட்களுக்கு முன் இரண்டு குட்டிகள் உள்பட எட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் முகாமிட்டிருந்தன.
அவற்றை கண்காணித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கச் சென்ற சக்திவேலிடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை. அலைபேசியில் தொடர்பு கொண்டும் பயனின்றி போனதால் சந்தேகத்தில் உறவினர்கள் தேடினார்.
அப்போது தேயிலைத் தோட்டத்தினுள் பலத்த காயங்களுடன் சக்திவேல் இறந்த கிடந்ததை பகல் 12:00 மணிக்கு பார்த்தனர். அப்பகுதியில் நேற்று கடும் மேகமூட்டமாக இருந்ததால் யானைகள் நிற்பது தெரியாமல் அவற்றிடம் சிக்கி சக்திவேல் இறந்ததாக தெரியவந்தது. சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் போலீசார் வரும் முன்பு சக்திவேலின் உடலை மீட்டு அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதனை கண்டித்தும், காட்டுயானைகளிடம் சிக்கி உயிர் பலி அதிகரித்து வருவதால் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தோண்டி மலை பகுதியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இரவு 7:00 மணி வரை பேச்சு வார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வரவில்லை.