திருச்சி: ''பூரண சுயராஜ்யம் என்பதன் பொருளை நாம் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்,'' என, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலையில், 46வது இந்திய சமூக அறிவியல் மாநாடு நேற்று துவங்கியது. மாநாடு மலரை வெளியிட்டு, 'வீடியோ கான்பரன்சிங்' வழியே தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஐந்து நாள் மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது:
காலனி ஆதிக்கத்துக்கு முன்பே இந்தியாவின் கலாசாரம், பண்பாடு மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தது. இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார், அரசியல், சமூக, பொருளாதார பண்புகளை, அவர்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்தனர்.
அதுவே, நம் கல்விமுறை, பொருளாதாரம் மற்றும் இதர தளங்களில் தலையீட்டை ஏற்படுத்தியது. இதற்கான ஆதாரங்கள் ஆவண காப்பகங்களில் உள்ளன.
பூரண சுயராஜ்யம் என்பதன் பொருளை நாம் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். சுதந்திர இந்தியாவின் சுயராஜ்யத்தை உணர வேண்டும் என்றால், நாம் காலனிய அடிமை மனநிலையில் இருந்து விடுபட வேண்டும்.
இந்த சமூக அறிவியல் மாநாட்டின் வெளியீடுகள், இந்தியாவின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்துக்கும் பயன்பட வேண்டும். இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் என அனைவரும், அவரவர் துறையில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கவர்னர் பேசினார்.