புதுடில்லி: 'ஆந்திராவில் உள்ள அகோபிலம் மடத்துக்கு சொந்தமான கோவிலுக்கு செயல் அலுவலர்களை நியமிக்க, மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை' என உத்தரவிட்டு, ஆந்திர அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு கர்னுால் மாவட்டத்தில் உள்ள மிகப் பழமையான அகோபிலம் மடத்துக்கு சொந்தமான கோவிலுக்கு, செயல் அலுவலர்களை நியமித்து மாநில அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மடத்தின் நிர்வாகம் சார்பில் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: இந்த கோவில், அகோபில மடத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி; இது ஹிந்து மதம் பற்றிய பிரசாரம் மற்றும் ஸ்ரீ வைஷ்ணவத்தை பரப்புவதற்காகவும் செயல்பட்டு வருகிறது.
இந்த கோவிலுக்கு மாநில அரசு சார்பில் செயல் அலுவலர்களை நியமிப்பது, இந்த மடத்தின் நிர்வாக உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளது. மேலும், அரசியலமைப்பின், '26 டி' சட்டப் பிரிவை மீறுவதாகவும் உள்ளது. எனவே, கோவிலுக்கு செயல் அலுவலர்களை நியமிக்கும் மாநில அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து, மாநில அரசு மற்றும் சில அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.கவுல், ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அகோபில மட கோவிலுக்கு செயல் அலுவலர்களை நியமிப்பதற்கு மாநில அரசுக்கு, சட்டப்படி எந்த அதிகாரமும் இல்லை. இது தொடர்பான விஷயங்களை சம்பந்தபட்ட மத அமைப்புகளை சேர்ந்தவர்களே கையாளட்டும்' என கூறிய நீதிபதிகள், மடத்தின் நிர்வாகத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.