மதுரை: ''மற்றவர்கள் நம்மீது வைக்கும் எதிர்பார்ப்பை துாண்டுதலாக வைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்'' என மதுரை மாணவி அஸ்வினிக்கு 17, பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
அனைத்து மாநிலங்களில் இருந்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். தமிழகத்திலிருந்து மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் பிளஸ் 2 மாணவி அஸ்வினிக்கு முதல் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ''எங்களது பெற்றோர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது எங்களுக்கு மன உளைச்சலை கொடுக்கிறது. நாங்கள் என்ன செய்வது என்று அறியாமல் இருக்கிறோம் எங்களை வழி நடத்துங்கள்'' என அஸ்வினி கேட்டார்.
பிரதமர் பதில் அளித்து பேசியதாவது: கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளர்கள் 'சிக்ஸர்' என்று அவரவர் விருப்பத்தை கூறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் பேட்ஸ்மேன் தன்னை நோக்கி வரும் பந்தின் மீது மட்டுமே குறியாக இருப்பார். மற்றவர்களுடைய எதிர்பார்ப்பை பற்றி கவலைப்படக்கூடாது. இருப்பினும் அதை ஒரு உந்துதல் ஆகவும் துாண்டுதலாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். கவனம் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும்., என்றார்.