உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டத்தில் அரசு பள்ளி இடத்தை தி.மு.க., ஊராட்சி தலைவரின் கணவர் கண்ணன் குடிசை போட்டு ஆக்கிரமித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதன் கட்டடங்களில் ஒன்று சேதமடைந்ததால் இடிக்கப்பட்டது. மற்ற கட்டடங்களும் பராமரிப்பில்லாததால் மாணவர்கள் டிச.,8ல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து பள்ளி கட்டடங்களை பராமரிக்கவும், இடித்த இடத்தில் புதிய கட்டடம் கட்டவும் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் துவங்க உள்ள நிலையில், ஊராட்சி தலைவர் விஜயாவின் கணவர் கண்ணன் குடிசை அமைத்து ஆக்கிரமித்துள்ளார்.
கண்ணன் கூறியது: புதிய கட்டடத்தின் நீள அகலத்திற்கு ஏற்ப பழைய கட்டடம் இடித்த பகுதியில் இடம் இல்லை. எனவே மாற்று இடத்தில் கட்டடம் கட்ட வேண்டும் என்பதற்காக தற்காலிகமாக ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து குடிசை அமைத்துள்ளோம். மாற்று இடத்தில் கட்டடம் கட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்'' என்றார்.
அதிகாரிகள் கூறுகையில், ''பள்ளி இடத்தில் குடிசை அமைத்துள்ளதை அகற்ற போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளோம். ஜன.,30ல் அகற்ற உள்ளோம்'' என்றனர்.
கிராம மக்கள் கூறுகையில், ''கண்ணன் தி.மு.க.,வைச் சேர்ந்தவர். புதிய கட்டடம் கட்ட டெண்டர் எடுத்துள்ளவர் அ.தி.மு.க., வைச் சேர்ந்தவர். இதுதான் பிரச்னைக்கும், ஆக்கிரமிப்புக்கும் காரணம்'' என்றனர்.