வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மேலுார்: மதுரை மாவட்டம் கீழையூரில் முன்னோர் பெருமை, பாரம்பரியம் ஆகியவற்றில் நாட்டம் கொண்ட புதுமண தம்பதியர், திருமணம் முடிந்ததும் மாட்டு வண்டி பயணம் செய்து, நெல்மணி, ஜல்லிக்கட்டு காளையை வணங்கினர்.
வசதி, வாய்ப்புகள் பெருகிவிட்ட இக்காலத்தில் திருமணங்கள் ஆடம்பரமாக, தரையில், தண்ணீரில் மட்டுமின்றி பலுானில் பறந்தபடி ஆகாயத்திலும் வினோத திருமணங்கள் நடக்கின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டம் கீழையூரில் புதுமணத்தம்பதியினர் மாட்டு வண்டியில் பயணித்து பாரம்பரிய ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கீழையூரைச் சேர்ந்த கதிர், பி.இ., முடித்துவிட்டு மதுரை ஆவினில் பணியாற்றுகிறார். இவருக்கும் சிவகங்கை மாவட்டம் வேங்கைபட்டி அஞ்சம்மைக்கும் அருகே உள்ள சிவபுரிப்பட்டி சிவன் கோயிலில் திருமணம் நடந்தது.
பின்னர் கீழையூர் திருமண மண்டபத்தில் இருந்து மணமக்கள் பாரம்பரியமாக முன்னோர் பயணம் செய்ததை நினைவு கூரும் வகையில் மாட்டு வண்டியில் மணமகன் வீட்டுக்குச் சென்றனர். மணமகன் வண்டி ஓட்ட, மணமகள் அவருடன் பயணித்தார். செல்லும் வழியில் மண்ணுக்கும், மாட்டுக்கும் மரியாதை செய்யும் விதமாக வயல்வெளியில் குவித்து வைத்திருந்த நெல் மணிகளையும், ஜல்லிக்கட்டு காளைகளின் காலில் விழுந்தும் வணங்கினர். புதுமணத் தம்பதியர் மாட்டு வண்டியில் மணமகன் வீட்டுக்குச் சென்றது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது.