குவாலியர்: ம.பி.,யில் 2 போர் விமானங்களும், ராஜஸ்தானில் ஒரு விமானமும் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானி ஒருவர் உயிரிழந்தார். அங்கு மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ம.பி., மாநிலம் மொரேனா என்ற இடத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் -30 மற்றும் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக இரண்டு விமானங்களும் கிளம்பி சென்ற போது விபத்து ஏற்பட்டது.
சுகோய் போர் விமானத்தில் 2 விமானிகள் இருந்துள்ளனர். மிராஜ் விமானத்தில் ஒரு விமானி இருந்துள்ளாதாக தெரிகிறது. இதில் ஒரு விமானி உயிரிழந்த நிலையில், மற்ற இருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில் சுகோய் விமானத்தில் இருந்த விமானிகள் பாராசூட் உதவியுடன் குதித்து உயிர் தப்பியதாக தெரிகிறது.
விபத்துக்குள்ளான ஒரு விமானம் ம.பி.,யின் மொரேனாவில் நொறுங்கியதாகவும், மற்றொரு விமானம் ராஜஸ்தானின் பாரத்பூர் பகுதியில் உள்ள வனப்பகுதி அருகே விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் கூறுகின்றன.
விமானப்படை விசாரணை
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. இந்த இரு போர் விமானங்களும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதா அல்லது வேறு காரணங்களினால் விபத்து நடந்ததா என விசாரணை நடத்தப்பட உள்ளது.
ராஜ்நாத்திடம் விளக்கம்
போர் விமானங்கள் விபத்து தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், இந்திய விமானப்படை தளபதி விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

ராஜஸ்தானிலும் விபத்து
அதேபோல், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது. முதல் கட்ட விசாரணையில் இந்த விமானம், இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் எனவும், அடர்ந்த பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.