மும்பை: மஹாராஷ்டிராவில், காதலித்த ஹோமியோபதி மருத்துவ மாணவியை, அவரது குடும்பத்தினர் கழுத்தை நெரித்து, தீ வைத்து எரித்து கவுரவக் கொலை செய்ததை அடுத்து, போலீசார் நேற்று ஐந்து பேரை கைது செய்தனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாந்தேட் மாவட்டத்தின் பிம்ப்ரி மஹிபால் கிராமத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவம் படிக்கும் மாணவி சுபாங்கி ஜோக்டண்டுக்கு, ௨௨, சமீபத்தில் பெற்றோர் திருமணம் நிச்சயித்தனர். மணமகனாக வரப் போகிறவரிடம் பேசிய சுபாங்கி, தான் ஒருவரை காதலித்து வருவதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால், அந்த திருமணம் தடைபட்டது. இதில் ஆத்திர மடைந்த சுபாங்கியின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள் என 5 பேர், அவரது கழுத்தை நெரித்து கொன்று, உடலை தீ வைத்து எரித்து ஆற்றில் வீசினர். இதையறிந்த போலீசார், மருத்துவ மாணவியை கவுரவக் கொலை செய்த ஐந்து பேர் மீது, கொலை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.