திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், 30 கோடி ரூபாய் மதிப்பிலான, காங்., கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை கட்சி நிர்வாகிகள் மீட்டனர்.
திருவண்ணாமலை மேற்கு கோபுர தெருவில், 1945 ஏப்.,11ல் மக்களிடம் வசூலிக்கப்பட்ட நன்கொடை பணத்திலிருந்து இந்து மகாஜனசபை சார்பில், ஒரு ஏக்கர், 50 சென்ட் இடம் வாங்கப்பட்டு, 1960 மார்ச், 22ல், திருவண்ணாமலை நகர காங்., கமிட்டிக்கு தானமாக வழங்கப்பட்டது. 1969ல் காங்., இரண்டாக பிளவு பட்டு, இந்திரா காங்., மற்றும் ஸ்தாபன காங்., என பிரிந்தது.
இதையடுத்து ஸ்தாபன காங்., நிர்வாகிகள் இடத்தை அனுபவித்து வந்தனர். பின் ஸ்தாபன காங்., பல கட்டங்களில், ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் என கட்சி பெயர் மாறிய நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஐக்கிய ஜனதா தள கட்சியினர் இந்த இடத்தை, கட்சி அலுவலகமாக அனுபவித்து வந்தனர்.
ஆனால், இடத்தின் பட்டா காங்., கமிட்டியின் பெயரிலேயே இருந்து வந்த நிலையில் கடந்த, 2012ல், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு சொந்தமான இடம் என பட்டா மற்றம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக கூறி, பட்டாவை ரத்து செய்யக்கோரி, திருவண்ணாமலை காங்., கமிட்டி நகர செயலாளர் வெற்றி செல்வன், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தார். இதை விசாரித்த வருவாய்த்துறையினர் ஜக்கிய தனதா தளம் கட்சி பெயரில் இருந்த பட்டாவை, 2022ம் ஆண்டு ரத்து செய்து, மீண்டும் திருவண்ணாமலை காங்., கமிட்டி பெயருக்கு மாற்றம் செய்தது.
இந்த இடத்தை தற்போது, காங்., கட்சியினர் கைப்பற்றி கட்சி அலுவலகமாக மாற்றி வரும் நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். காங்., கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் சமாதானமடைந்து, திருவண்ணாமலை நகர காங்., கமிட்டியிடம் ஒப்படைத்தனர்.