
கர்நாடக மாநிலம் கபினி வனச்சரகம் மைசூரில் இருந்து 90 கி.மீட்டர் துாரத்தில் உள்ளது.
நாடு முழுவதும் காடுகள் நிறைந்திருந்தாலும் புலிகள் உலாவுவது என்பது வெகு சில காடுகளே.அந்த வெகு சில காடுகளில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி வனச்சரகம் முக்கியமானதாகும்.

காட்டுயிர்களை புகைப்படம் எடுக்கும் புகைப்படக்கலைஞர்கள் அனைவரது கனவும் எப்படியாவது புலியை படம் எடுக்கவேண்டும் என்பதுதான்.

அவர்கள் கனவு நனவாக கபினி வனச்சரகத்திற்கு தற்போது போகலாம் என்கிறார் அங்கு சென்று புலிகளை தனது கேமிராவால் வேட்டையாடி வந்திருக்கும் சென்னையைச் சேர்ந்த ஷியாம் பாலகிருஷ்ணன்.

அங்கே செல்ல விரும்புவர்கள் JLR Jungle Lodges & Resorts என்ற இணையத்திற்கு சென்று தங்குவதற்கும் காட்டுலா செல்வதற்கான ஜீப் சவாரிக்கும் பதிவு செய்து கொள்ளவேண்டும்.அரசின் வனத்துறையே இதை ஏற்று நடத்துவதால் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. நீங்கள் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப அறைகளையும் தங்கும் நாட்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஷியாம் தங்கியிருந்த நான்கு நாட்களுமே புலிகள் இவரது கேமரா கண்களுக்கு தட்டுப்பட்டு இருக்கிறது அதிலும் அங்குள்ள மேகி என்ற புலி இப்போதுதான் குட்டி போட்டுள்ளதால் அந்த குட்டிகளுடன் இரைக்காக உலாவந்து கொண்டே இருக்கிறது.புலிகள் தவிர காட்டு யானை மான்கள் கழுகு மந்தி என்று காட்டிற்கான எல்லா உயிர்களும் உள்ளன.
ஆகவே புலிகளை படம் எடுக்க விரும்புபவர்கள் இப்போதே திட்டமிடுங்கள் சென்று வாருங்கள் உங்கள் கேமிராவில் புலிகளை கொண்டுவாருங்கள் அது மட்டுமல்ல கொட்டிக்கிடக்கும் இயற்கையை காணலாம் கூடவே கானகங்கள் நமக்கு அளித்துவரும் மிகப்பெரிய பங்களிப்பையும் உணரலாம்.
-எல்.முருகராஜ்