பெங்களூரு: குற்றவாளிகளைப் பிடிப்பதில், போலீசார் விரைந்து செயலாற்ற வேண்டும். இதில் தடயவியல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா உள்ளிட்ட எட்டு மாநிலங்களுடன், இந்த ஆண்டு சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பெல்காவி மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று(ஜன.,28) உரையாற்றுகிறார்.
தடயவியல் துறை:
இதற்கிடையே கர்நாடகாவில் தேசிய தடய அறிவியல் மையத்தை திறந்து வைத்து, மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: கர்நாடகாவில் குற்றங்கள் அதிகமாக நிலவி வருகின்றன. குற்றவாளிகளைப் பிடிக்க, போலீசார் விரைந்து செயலாற்ற வேண்டும். போலீசாருக்கு உதவுவதில் தடயவியல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

புதிதாக சிந்தியுங்கள்:
கர்நாடகா மாநிலத்தில் பிவிபி பொறியியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: உங்களால் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்ய முடியாவிட்டால், உங்கள் வாழ்க்கையை, உங்கள் தேசத்திற்காக வாழ்ந்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். அதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார்.
பிரதமரின் தொலைநோக்கு பார்வையால், மாணவர்களின் வாழ்க்கைக்கு தேவையான பல வாய்ப்புகளின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நாட்டிற்காக உழைக்க வேண்டும். புதிதாக சிந்தியுங்கள், தைரியமாக இருங்கள், முன்னோக்கிச் செல்லுங்கள். மேலும் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நாட்டை உலகில் முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.