மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 25 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி அப்பள்ளியில் தலைமை ஆசிரியரால் தேசியக் கொடியை ஏற்றப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு, இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் பள்ளிக்கூடம் மூடப்பட்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வீடு திரும்பியுள்ளனர். ஆனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடி மாலை 6 மணி இறக்கப்பட வேண்டும் என்ற மரபு இருந்தும் இரவாகியும் தேசியக்கொடி கம்பத்திலிருந்து இறக்கப்படாமல் பறந்தவாறு இருந்தது.
தேசிய கொடியை அவமதித்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரவியது. இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை விஜயா மற்றும் இடைநிலை ஆசிரியர் பிரியதர்ஷினி ஆகிய 2 பேரையும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் அம்பிகாபதி வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.