திராவிட செம்மல்கள் போடுவதெல்லாம் வெளிவேஷம்!
என்.நக்கீரன், மதுரையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'குடியரசு தினத்தன்று, ஊராட்சி தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதற்கு, எந்தத் தடையும், இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார், தமிழக தலைமைச் செயலர் இறையன்பு. ஆனாலும், வழக்கம் போல தங்களின் திருவிளையாடலை காட்டி
விட்டனர், தி.மு.க.,வினர். காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சியின் தலைவராக இருப்பவர், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சுகுணா மேரி. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், குடியரசு தினத்தன்று, திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றச் சென்றுள்ளார்; அவரை, தி.மு.க., கிளை செயலர்
பாலச்சந்திரன் உட்பட சிலர் தடுத்துள்ளனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்மணியான ஜனாதிபதி திரவுபதி முர்மு, டில்லியில் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ள நிலையில், ஊராட்சி தலைவரான சுகுணா மேரி, திராவிட மாடல் ஆட்சி நடக்கும் அருமை தமிழகத்தில், தேசியக் கொடி ஏற்ற முடியாமல் தடுக்கப்
பட்ட கொடுமை நடந்துள்ளது.அம்பேத்கரின் உண்மையான விசுவாசியான, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இதுபற்றி வாயே திறக்கவில்லை. அதேநேரத்தில், 'அடடா... இதுவல்லவோ திராவிட செம்மல்கள் போற்றும் சீர்மிகு சமூக நீதி' என்று கேலி செய்திருக்கிறார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.
திராவிட செம்மல்கள் பெண்களை, 'ஓசி கிராக்கி'கள் என்று ஏளனம் செய்வர்; பெண் போலீசுக்கும் தாங்க முடியாத பாலியல் தொல்லை கொடுப்பர்; மனு கொடுக்க வந்த பெண்ணை, அந்த மனுவாலே தலையில் அடித்து தொல்லை தருவர். முந்தைய தி.மு.க., ஆட்சிக் காலத்தில், முன்னாள் பிரதமர் இந்திராவுக்கும், அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதாவுக்கும், தாங்க முடியாத தொல்லைகள் கொடுத்த, திராவிட செம்மல்கள், சாதாரண ஊராட்சி தலைவரை மட்டும் விட்டு விடுவரா?
நடிகை பானுமதியின் கற்பு பற்றி ஏளனம் செய்தார், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. 'திராவிட நாடு எங்கே இருக்கிறது' என்று சட்டசபையில் அப்பாவித்தனமாக கேள்வி கேட்ட அனந்தநாயகிக்கு, கருணாநிதி கொடுத்த விளக்கம், ஆபாசத்தின் உச்சம் என்பதை நாடறியும். பெண்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வதில், நாலாந்தர பேச்சாளர்களை விட கைதேர்ந்தவர்கள், தி.மு.க., அமைச்சர்கள் என்பதும் நிரூபணமாகி உள்ளது. இந்த நிலையில், 'பெண்மையை போற்று
வோம்; பெண்மையை மதிப்போம்' என்று, திராவிட செம்மல்கள் சொல்வது வெறும் வெளிவேஷம். 'பெண்மையை துாற்றுவோம்; பெண்மையை மிதிப்போம்' என்பதே, அவர்களின் கொள்கை.
பாதுகாப்பான சாலை வசதி அவசியம்!
ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில், போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசாரால், சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.அப்போது, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு, பாதுகாப்பான சாலை பயணத்திற்கான அறிவுரைகள் இடம் பெற்ற, 'நோட்டீஸ்'களை வினியோகிப்பதுடன், ஒலிபெருக்கி வாயிலாகவும், போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே விழிப்புணர்வு பிரசாரமும் செய்கின்றனர்.அதே நேரத்தில், தற்போது மாநிலம் முழுதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, மாநில நெடுஞ்சாலைகளும் பயணிக்க லாயக்கற்ற விதத்தில் குண்டும், குழியுமாக உள்ளன; இவற்றை நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக பராமரிப்பதில்லை.சென்னை மாநகரிலும் சாலைகள் நிலைமை படுமோசம். சென்னையில் சமீபத்தில், 'டூவீலரில்' பயணித்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியர், மோசமான சாலை காரணமாக கீழே விழுந்ததில், பின்னால் வந்த வாகனம் மோதி உயிரிழந்தார்.
மோசமான சாலைகளால், இப்படி விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாவது, தினமும் நடந்து வருகிறது.தேசிய நெடுஞ்சாலைகளில், குறிப்பிட்ட துாரத்திற்கு ஒரு முறை சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது; ஆனாலும், சம்பந்தப்பட்ட துறையினர், தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிப்பது, மிக கேவலமாக உள்ளது. எனவே, தேசிய மற்றும்மாநில நெடுஞ்சாலைத் துறையினர் மட்டுமின்றி, மாநகராட்சிகள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், சாலைகள்
பராமரிப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும். குறைந்தபட்சம், 'பேட்ச் ஒர்க்' செய்தாலாவது, மனித உயிர்கள் பலியாவது குறையும். பாதுகாப்பான பயணம் குறித்து பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டும் போதாது; பாதுகாப்பான சாலை வசதியும் அவசியம்.
காமராஜர் நிழலை கூட தொட தகுதியில்லாதவர்!
தி.ஸ்ரீராம் விஷ்ணு, சென்னையில் இருந்து எழுதுகிறார்: நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, நீலகிரி லோக்சபா தொகுதி, தி.மு.க., -எம்.பி.,யும், 'ஸ்பெக்ட்ரம்'ஊழல் வாயிலாக, நாட்டிற்கே அவமானத்தை தேடித் தந்தவருமான ஆ.ராஜா, 'வளர்ச்சி திட்டங்கள் மட்டுமே, அரசின் வேலை கிடையாது.'முன்னாள் முதல்வர் காமராஜர், பல நல்ல செயல்கள் செய்துள்ளார். ஆறு முறை பார்லிமென்ட் உறுப்பினராக இருந்தார்; காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார். இரு பிரதமர்களை உருவாக்கினார்; தமிழக
மக்களையும் நேசித்தார். 'இப்படிப்பட்ட பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான அவர், தமிழ்நாடு என்ற பெயரை ஏற்க மறுத்தார். அன்று முதல் அவருக்கு வீழ்ச்சி துவங்கியது. அதேபோல, தற்போதும் சிலருக்கு வீழ்ச்சி துவங்கியுள்ளது' என்று, 'வீர வசனம்' பேசியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து, ௭௪வது குடியரசு தினத்தையும் கொண்டாடி உள்ளோம். தமிழகத்தில் இதுவரை நடந்த ஆட்சியில், காமராஜர் ஆட்சியையே பொற்கால ஆட்சி என்று, பலரும் பாராட்டி வருகின்றனர். அவர் காலத்தில் தான், தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களும், வளர்ச்சித் திட்டங்களும் அமலாகின.
அப்படியிருக்க, யாரையோ குளிர்விப்பதற்காக, அப்பழுக்கற்ற நேர்மையான மனிதரான காமராஜரை, ஊழலில் உலகப் புகழ் பெற்ற ஆ.ராஜா வம்புக்கிழுப்பது அநாகரிகமாகும். ராஜாவின் பேச்சுக்கு, காங்., தலைவர்கள் யாரும் கண்டனம் தெரிவிக்காதது, அதை விட கேவலம். இன்று மெத்தப்படித்த மேதாவி போல, பல விஷயங்கள் பற்றி ஆ.ராஜா பேசுவதற்கு, அன்று காமராஜர் அறிமுகப்படுத்திய இலவச கல்வித் திட்டமே காரணம். இதே ராஜா தான், சில மாதங்களுக்கு முன், 'ஹிந்துக்கள் எல்லாம் விபச்சாரிகளின் மகன்கள்' என்று பேசி, மக்களின் கோபத்திற்கு ஆளானார்.
இப்போது, 'தமிழ்நாடு, தமிழகம்' என்ற பிரச்னை ஓரளவுக்கு முடிவுற்ற நிலையில், மாபெரும் தலைவரான காமராஜர் பற்றி, வாய்க்கொழுப்பெடுத்த ராஜா பேசுவது சரியல்ல.
காமராஜரின் நிழலைக் கூட தொட தகுதியில்லாத ஊழல் ராஜா, அவரைப் பற்றி பேசுவது அபத்தத்தின் உச்சம். அவரை, தி.மு.க., தலைமை கண்டிக்க வேண்டும்.
முதலில் காங்கிரசை கண்டுபிடியுங்கள்!
சி.கலாதம்பி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னை சத்தியமூர்த்தி பவனில், குடியரசு தின விழா சமீபத்தில் நடந்தது. அந்நிகழ்ச்சி முடிந்ததும், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசிய பேச்சு தான், நினைக்க நினைக்க சிரிக்க வைக்கிறது; அப்படி என்ன பேசினார் என்று கேட்கிறீர்களா...
'ஈரோட்டில், எங்களுடைய தோழமை கட்சிகளின் தொண்டர்கள் பம்பரமாக சுழன்று வேலை செய்கின்றனர். ஆனால், அதே ஈரோட்டில் தேடி தேடிப் பார்க்கிறோம்... கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, எதிர்தரப்பினர் காணப்படவே இல்லை. களத்தில் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம்' என்று பேசியுள்ளார். இப்போது கூட, காங்கிரசார் களத்தில் இறங்கி கட்சிப் பணி பார்க்கின்றனர் என, அழகிரியால் சொல்ல முடியவில்லை. அப்படி யாராவது இருந்தால் தானே! மேட்டுக்குடி மனவோட்டம் உடைய காங்., தலைவர்கள் யாராவது, கட்சிக்காக, 'போஸ்டர்' ஒட்டிப் பார்த்ததுண்டா?
தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சித்தொண்டர்கள், வெயிலில் கருத்து, தொண்டை தண்ணீர் வற்ற, முதுகு தண்டு வளைய, தெரு தெருவாக அலைந்து, வாக்காளர்கள் அனைவரிடமும் ஓட்டு பிச்சை கேட்பராம்...காங்கிரசார், அவர்களுக்கு, 'பெப்பே' காட்டி, பதவியில் அமர்ந்து கொள்வராம். தமிழகத்தில் காலம் காலமாக இது தான் நடக்கிறது. தமிழகத்தில், 50 ஆண்டுகளில், ஒரே ஒரு முறை மட்டுமே காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.அதுவும், திராவிட கட்சிகள் கழற்றி விட்டதால், 2014 லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட்டு களம் காண வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது; அதில், பல்லுடைந்து போனது தான் மிச்சம். அன்றைய சூழலில், வெறும், 4 சதவீதம்
மட்டுமே காங்கிரசின் ஓட்டு வங்கி. காமராஜர் காலத்திற்கு பின், சரிந்து வரும் காங்கிரசின் செல்வாக்கை கணக்கிடுகையில், தற்போது, 1 முதல், 2 சதவீத ஓட்டு வங்கி மட்டுமே, அக்கட்சிக்கு இருக்கலாம். தமிழகத்தில், திராவிடக் கட்சி தொண்டர்களின் ஓட்டால் தான், காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதே தவிர, காங்கிரஸ் தொண்டர்களால் அல்ல. உண்மையில், அது, காங்., வெற்றி அல்ல; திராவிடக் கட்சிகளின் பிச்சை!
ஒவ்வொரு தேர்தலின் போதும், அ.தி.மு.க., - தி.மு.க., என, ஏதாவது கட்சி அலுவலக வாசலில் சீட்டுக்காக, 'திருவோடு' ஏந்தி நிற்பது தானே, தமிழக காங்கிரசின் நிலை. இந்த லட்சணத்தில், 'கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரணியே இல்லை' என, அழகிரிக்கு பெருமை வேறு!தமிழகத்தில் முதலில் காங்கிரஸ் இருக்கிறதா... அப்படி இருக்கிறது என்றால், ஒரே ஒரு தேர்தலிலாவது தனித்து போட்டியிடும் அளவிற்கு செல்வாக்கு இருக்கிறதா? 'கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரணி இல்லை' என, பெருமை பீற்றுவதை விட, தமிழகத்தில் காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்து பாருங்கள், அழகிரி அவர்களே!
அமைச்சர்களால் 'குலப்பெருமை' ஓங்குகிறது!
மு.நேசமணி பாண்டியன்,மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், சமீபத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பார்வையிடச் சென்ற பால்வளத் துறை அமைச்சர் நாசர், அமர நாற்காலிகள் வராததால் கோபத்துடன் தொண்டர்மீது கல் எறிந்ததை, அனைத்து நாளிதழ்களும், படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன. நாற்காலி வராததற்காக வெட்ட வெளியில், கல் எடுத்து அடிக்கும் அமைச்சரின் உள்முகம் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்த்தாலே பயமாக இருக்கிறது. கருணாநிதி வாழ்ந்த காலம் வரை, நாவடக்கத்தில் தான், தி.மு.க.,விற்கு பஞ்சம் இருந்தது. தற்போது, அதன் பரிணாம வளர்ச்சியால், வெளிநடத்தையும் படுகேவலமாக மாறியுள்ளதை, அமைச்சர் நாசரின் கீழ்த்தரமான செயல் எடுத்துரைக்கிறது.ஆயிரம் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அமைச்சர்கள் அத்தனை பேரும், மக்களுக்கு அடிமை என்ற உன்னத எண்ணத்தை விதைத்திருந்தார், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், தற்போது தி.மு.க.,வில் அங்கம் வகித்து வரும், சாதாரணகவுன்சிலர்கள் கூட, 'ஏரியாவிற்கு நான் தான் ராஜா...' என்ற எண்ணத்தில், அடாவடியில் ஈடுபடுகின்றனர்.'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் ரவுடித்தனம் அதிகரிக்கும்' என்ற பொதுவான கருத்து, மக்கள் மத்தியில் நிலவுகிறது; அது, ௧௦௦ சதவீதம் உண்மை என்பதை, இவ்வுலகம் அறியும் வகையில், தங்களின் செயல்பாடுகள் வாயிலாக, அரங்கேற்றி வருகின்றனர், தி.மு.க.,வினர்.
அமைச்சர்களால், தி.மு.க.,வின், 'குலப்பெருமை' ஓங்கி வருகிறது; அதுவே, ஆட்சிக்கு விரைவில் குழிபறித்து விடும் என்பதில் சந்தேகமில்லை.
சினிமா பைத்தியங்கள் திருந்துவது எப்போது?
ஆர்.மகேசன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: மதுரையில், 'தினமலர்' நாளிதழும், 'கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி'யும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வாழ்க்கையில் மாணவர்கள் முன்னேற, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நான்கு ஆலோசனைகள் கூறியிருந்தார்... அதாவது, 'உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும்; அதை அடைய, அயராது உழைக்க வேண்டும்.அறிவுக்கான உங்களின் தேடல் என்றும் தொடர வேண்டும். தோல்வியை கண்டு துவண்டு விடாமல், விடாமுயற்சியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்' என்பதே, அந்த ஆலோசனைகள். 'தினமலர்' நாளிதழ் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற, தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலை உள்ளிட்டோரும், தங்களின் தன்னம்பிக்கை உரையில், அப்துல்கலாம் தெரிவித்த கருத்துகளையே வலியுறுத்தியுள்ளனர். அதாவது, எந்த ஒரு தகுதித் தேர்வையும், துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பது தான், இளைஞர்களுக்கு தெரிவிக்கப்பட்ட செய்தி. நாட்டின் எல்லையைக் காக்க, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், கடும் உறைபனியிலும் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, நம் தமிழகத்தில், பல இளைஞர்கள் சினிமா நடிகர்களால் தவறான வழியில் நடத்தப்பட்டு, வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். தங்களுக்கு பிடித்த நடிகரின் படம் வெளியாகும் நாளில், கூத்தடித்து உயிரை விடுகின்றனர். சமீபத்தில், 15 வயது பள்ளி மாணவன் ஒருவன், தன் பெயரை, நடிகர்விஜய் நடித்த படத்தின் பெயரான, ஜில்லா என்று மாற்றியிருக்கிறான்; அதைக் கேட்ட போது, அதிர்ச்சியாக இருந்தது.இதேபோல, தங்களின் பெயரை, பிகில், சர்க்கார், பீஸ்ட் என, எத்தனை பைத்தியக்கார இளைஞர்கள் மாற்றி வைத்து, அலைந்து கொண்டிருக்கின்றனரோ தெரியவில்லை. இதுபோன்ற சினிமா பைத்தியங்கள் திருந்துவது எப்போதோ!