![]()
|
இன்று பல நகரங்களில் ரேபிட்ஓ எனும் பைக் டாக்சி இயங்கி வருகிறது. தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வரும் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், 2022 நிதியாண்டில் ரூ.597 கோடி செலவிட்டு, ரூ.144.8 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதாவது ரூ.439 கோடி நஷ்டமடைந்துள்ளது.
இருப்பினும் வளர்ச்சி வாய்ப்பு கொண்ட நிறுவனமாக முதலீட்டாளர்களால் பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் கடந்த ஏப்ரலில் நிதி திரட்டல் சுற்றில் ரூ.6500 கோடியாக மதிப்பிடப்பட்டது. இது முந்தைய மதிப்பீட்டைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். மேலும் அப்போது ரூ.1,500 கோடி நிதியை திரட்டியது. இருப்பினும் ஸ்விகி ஆதரவுப் பெற்ற நிறுவனம், தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. அது 2022ல் இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளது.
நகரங்களுக்குள் குறைந்த கட்டணத்தில் விரைவாகச் சென்று வருவதற்கு தீர்வாக பைக் டாக்சி என்ற ஐடியாவை ரேபிட்ஓ நிறுவனர்களான ரிஷிகேஷ், பவன் மற்றும் அரவிந்த் சன்கா ஆகியோர் தொடங்கினர். ஒருவர் மட்டும் பயணிக்க விரும்புபவர்கள் ஆட்டோவுக்கு மாற்றாக இதை தேர்ந்தெடுக்கின்றனர்.
சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இதன் சேவைக் கிடைக்கிறது. கிலோ மீட்டருக்கு ரூ.8 முதல் பீக் ஹவர்ஸ், டிமாண்டிற்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. பகுதி நேரமாக இந்தப் பணியை பலர் பார்க்கின்றனர். அவர்களுக்கு தினசரி ரூ.300 முதல் ரூ.500 வரை கிடைப்பதாக கூறப்படுகிறது. தற்போது ரேபிட்ஓவில் ஆட்டோவும் இணைக்கப்பட்டுள்ளது.
ரேபிட்ஓ-வின் நிதிநிலைமை
![]()
|
2021ல் வருவாய் ரூ.75.6 கோடி. செலவுகள் ரூ.254 கோடி. நஷ்டம் ரூ.166 கோடி.
2022ல் வருவாய் ரூ.144.8 கோடி. செலவுகள் ரூ.597 கோடி. நஷ்டம் ரூ.439 கோடி.
கட்டுக்கடங்காத செலவுகள்
2022 நிதியாண்டில் மட்டும் பார்த்தால், கேப்டன்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் இதரவற்றிற்கான செலவு ரூ.213.6 கோடி. மொத்த செலவில் இதன் பங்கு 35.8%.
2021 நிதியாண்டில் இந்த வகை செலவு ரூ.70 கோடி மட்டுமே. விளம்பரங்களுக்கான செலவு 2022ல் ரூ.176.7 கோடி. ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகள் ரூ.107 கோடி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கான செலவு ரூ.40 கோடி. மென்பொருள் உள்ளிட்ட கட்டமைப்பு செலவுகள் ரூ.25 கோடி. இதர செலவுகள் ரூ.34.74 கோடியாக பதிவாகியுள்ளது.
சட்டச் சிக்கல்கள்
ரேபிட்ஓ நிறுவனம் வெஸ்ட்பிரிட்ஜ், டிவிஎஸ் மோட்டார், ஷெல் வென்ச்சர்ஸ், நெக்சஸ் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து ரூ.2,400 கோடி திரட்டியுள்ளது. இருப்பினும் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் இது போன்ற பைக் டாக்சி நிறுவனங்கள் ஒழுங்குமுறை பிரச்னையைச் சந்தித்து வருகின்றன. மும்பை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் ரேபிட்ஓவின் சேவையை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடியாகியுள்ளது.