இதே நாளில் அன்று
ஜனவரி 29, 1915
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுாரில், காப்பீட்டு முகவராக இருந்த, வேதாந்தம் அய்யங்காரின் மகனாக, 1915ல் இதே நாளில் பிறந்தவர், வி.வி.சடகோபன். ஐ.சி.எஸ்., தேர்வெழுதுவதற்காக சென்னை வந்த இவரை, எழுத்தாளர் வ.ரா., கலைத்துறையில் ஈடுபடுத்தினார்.
இவர், நவயுவன் என்ற திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி, அதிர்ஷ்டம், மதனகாமராஜன், வேணுகானம் போன்ற திரைப்படங்களிலும் நடித்தார். காந்தி கிராம பல்கலையில் இவர் நடத்திய, 'குறவஞ்சி' இசை நாட்டியத்தை பார்த்த முன்னாள் பிரதமர் நேரு, டில்லி பல்கலை பேராசிரியராக நியமித்தார். கம்பராமாயணம், நாலாயிர திவ்விய பிரபந்தங்களுக்கு இசையமைத்த இவர், 1980 ஏப்ரல் 10ல், டில்லியில் இருந்து, சென்னை வந்த ஜி.டி.எக்ஸ்பிரஸ் ரயிலில், கூடூரில் மாயமானார்; அதன்பின், இவரைப் பற்றிய தகவல் இல்லை.
படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற, முதல் தமிழ் நடிகர், எம்.ஜி.ஆர்., வியந்த, அழகர் வி.வி.சடகோபன் பிறந்த தினம் இன்று!