மும்பை,: ''நீதிபதிகள் நியமன முறை தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் தொடர்ந்து கசப்பான வார்த்தைகளை தெரிவித்து வருவது சரியானதல்ல. நீதிபதிகள் நியமன பரிந்துரைகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலதாமதம் செய்வது, ஜனநாயகத்தை கொல்வதாக அமைந்துவிடும்,'' என, ஓய்வு பெற்ற நீதிபதி ரோஹின்டன் பாலி நரிமன் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் முடிவுகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய ஐந்து நீதிபதிகள் உடைய, 'கொலீஜியம்' எடுக்கிறது.
![]()
|
எதிர்ப்பு
இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு சமீப காலமாக தொடர்ந்து பேசி வருகிறார். இது தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே கருத்து போர் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னை குறித்து, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரோஹின்டன் பாலி நரிமன் பேசியதாவது:
தற்போதுள்ள நீதிபதிகள் நியமன முறைக்கு எதிராக, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடர்ந்து கசப்பான வார்த்தைகளை தெரிவித்து வருகிறார்.
கால தாமதம்
நம் நாட்டில் தற்போதுள்ள நடைமுறை இதுவரை மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக இது தொடர்பாக சர்ச்சை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஒருவர் நீதிபதியாக செயல்படுவதற்கு மிகச் சிறந்தவர் என்பதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் கொலீஜியத்தில் உள்ளவர்களே சரியாக கணிக்க முடியும்.
ஒரு நீதிபதி சுதந்திரமாக செயல்படுவதற்கு இந்த முறையே சிறந்தது. நீதிமன்ற சுதந்திரத்தின் கடைசி மற்றும் முக்கிய நடவடிக்கையான இந்த நியமன முறை தடம்புண்டால், நம் நாடு இருட்டில் தள்ளப்பட்டு விடும்.
நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைகளின் மீது உரிய காலத்தில் முடிவு எடுக்காமல் மத்திய அரசு கால தாமதம் செய்வது, ஜனநாயக படுகொலையாகும்.
உச்ச நீதிமன்றத்தில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய ஒரு சிறப்பு அமர்வை ஏற்படுத்த வேண்டும். நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரை மீது, மத்திய அரசு ௩௦ நாட்களுக்குள் முடிவு எடுக்காவிட்டால், அந்த நியமனம் செல்லும் என முடிவு எடுக்க வேண்டும்.
மத்திய சட்ட அமைச்சர் மிகவும் பொறுப்பான பதவியில் உள்ளார். அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தற்போதுள்ள நடைமுறையை அவர் கண்டிப்பாக ஏற்றாக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement