முன்னாள் பிரதமர் தேவகவுடா மருமகள் பவானி போட்டிக்கு அதிருப்தி வெளிப்படுத்திய குமாரசாமி பேச்சுக்கு, அண்ணன் மகனே தண்ணிர் காட்டும் வகையில் பதிலளித்து சங்கடத்துக்கு ஆளாகியுள்ளார்.
ஹாசன் மாவட்டம் ம.ஜ.த.,வின் கோட்டை என்றே சொல்லப்படுகிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆறு முறை லோக்சபா எம்.பி.,யாகவும், ஏழு முறை எம்.எல்.ஏ.,வாகவும் தேர்வு செய்யப்பட்டவர்.
கடந்த முறை தேர்தலில், ஹாசனில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில் ஒரு தொகுதியில் தவிர, மற்ற ஐந்தில் ம.ஜ.த., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
தேவகவுடா மகன் ரேவண்ணா ஹொளேநரசிபுரா எம்.எல்.ஏ.,வாகவும், இவரது மூத்த மகன் பிரஜ்வல் எம்.பி.,யாகவும், இளைய மகன் சூரஜ் எம்.எல்.சி.,யாகவும் பதவி வகிக்கின்றனர்.
இவரது மனைவி பவானி, ஏற்கனவே மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தவர். தற்போது, ஹாசன் சட்டசபை தொகுதி ம.ஜ.த., வேட்பாளர் தான் தான் என்று பகிரங்கமாக கூறினர். இது கட்சியினுள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசனில் போட்டியிட வேண்டிய கட்டாயம் பவானிக்கு இல்லை என குமாரசாமி சமீபத்தில் தெரிவித்தார்.
இதற்கு விளக்கமளித்து சூரஜ் கூறியதாவது:
ஹாசனில் போட்டியிட வேண்டிய கட்டாயம் பவானிக்கு இல்லை. ஆனால், அந்த தொகுதியில் போட்டியிட, அவர் தான் தகுதியான வேட்பாளர். இந்த விஷயத்தில், தேவகவுடாவும், ரேவண்ணாவும் அமர்ந்து கொண்டு இறுதி முடிவு எடுப்பர். குமாரசாமி கட்சியின் மூத்த அரசியல்வாதி. அவர் தன் விருப்பத்தை கூறியுள்ளார். அதற்கும், எங்களுக்கும் சம்மந்தம் இல்லை.
கட்சியின் எச்.பி.ஸ்வரூபா என்பவர் 'சீட்' கேட்கிறார். இதனால் குமாரசாமி பேசியிருக்கலாம். எனவே அனைவரும் அமர்ந்து ஆலோசித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
என் தாய்க்கு வாய்ப்பு தர வேண்டும் என்பது அல்ல. ஹாசனில் 2018ல் ம.ஜ.த., தோல்வி அடைந்தது. அதை மீட்பதே நோக்கம். தொண்டர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சூரஜ் பேச்சு, தேவகவுடா குடும்பத்தில் பூதாகரமாக வெடிக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே வாரிசு அரசியல் நடக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தேர்தல் நேரத்தில், இப்பிரச்னை ம.ஜ.த.,வுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- நமது நிருபர் -
.