சென்னை, ஆந்திர மாநில வளையப் பந்து கழகம் மற்றும் இந்திய வளையப்பந்து கூட்டமைப்பு இணைந்து, 35வது சப் - ஜூனியர் தேசிய வளையப்பந்து போட்டியை, ஆந்திர மாநிலம் அனங்காபள்ளியில், 22ல் இருந்து 26 வரை, தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் நடத்தின.
தமிழகம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் இருந்து, 25க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில், தமிழ்நாடு வளையப்பந்து சார்பில் பங்கேற்ற தமிழக மாணவர் அணி, குழு போட்டியில் ஆந்திராவை எதிர்த்து விளையாடி, 3-1 என்ற புள்ளி பெற்று, தங்க பதக்கத்தை வென்றது.
அதேபோல, மாணவியருக்கான குழு போட்டியில், தமிழக அணி, 3-0 என்ற கணக்கில், கேரளாவை வென்று, தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
தொடர்ந்து, மாணவர்களுக்கான தனிநபர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், தமிழக அணியைச் சேர்ந்த எம்.செல்வவிகாஸ், மற்றொரு தமிழக வீரரான சின்னகருப்பையாவை எதிர்த்து விளையாடி, 2 -- 1 என்ற புள்ளியில் வெற்றி பெற்று, தங்கம் வென்றார்.
அதேபோல, மாணவியருக்கான தனிநபர் ஒற்றையரில் தமிழக வீராங்கனைகளான செவ்வந்தி தங்கமும், மேக்லின் ஜெசிந்தாவும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
மாணவர்களுக்கான தனிநபர் இரட்டையரில், தமிழக அணியைச் சேர்ந்த யோகேஷ் - சஞ்சய் பிரசாத் ஜோடி வெள்ளிப் பதக்கத்தை பெற்றது. மாணவியரில், தமிழக வீராங்கனை அஸ்மிதா - தேவதர்ஷினி ஜோடி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
அனைத்து போட்டிகள் முடிவில், தமிழக அணி 34க்கு 31 புள்ளிகளை பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
தமிழக அணி, தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வெல்வது குறிப்பிடத்தக்கது.