புதுடில்லி, அண்டை நாடான சீனாவின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இந்தியா தன் அணு ஆயுதங்களை மேம்படுத்தி வருவதாக, அமெரிக்கா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் நம் நாடு எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. நீண்டகாலமாக பாகிஸ்தானுடன் எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இதனால், பாகிஸ்தானால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் தொடர்ந்து இருந்து வருகிறது.
![]()
|
இந்நிலையில், ௨௦௨௦ல் மற்றொரு அண்டை நாடான சீனா, கிழக்கு லடாக் எல்லையில் தன் படைகளை குவித்தது. இதில் எழுந்த மோதலில், இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, பல சுற்று பேச்சுகள் நடந்த நிலையிலும், எல்லையில் இரு நாட்டு படைகளும் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூட்டமைப்பு ஒன்று, ௨௦௨௨ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமான கட்டத்தில் உள்ளது. இத்தனை ஆண்டுகளாக, பாகிஸ்தானையே தன் முதல் எதிரியாக இந்தியா பார்த்து வந்தது.
இதையடுத்தே, பாகிஸ்தான் போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ளும் வகையில், தன் ராணுவத்தை இந்தியா பலப்படுத்தி வந்தது; மேலும், பாகிஸ்தானை குறிவைத்து அணு ஆயுதங்களையும் தயாரித்து வந்தது.
தற்போது, இந்தியாவிடம், எட்டு வகையான அணு ஆயுதங்கள் உள்ளன. இவற்றில், இரண்டு வான் வழியாக தாக்கக் கூடியவை. தரையில் இருந்து தாக்கக் கூடிய நான்கு ஏவுகணைகளும், கடலில் இருந்து தாக்கும் வகையிலான இரண்டு வகை ஏவுகணைகளும் இந்தியாவிடம் உள்ளன.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தியா தன் அணு ஆயுதங்களின் திறன்களை மேம்படுத்தி வருகிறது அல்லது புதுப்பித்து வருகிறது.
குறிப்பாக சீனாவிடம் இருந்து ஆபத்து வந்தால், அதை எதிர்கொள்ளும் வகையில் இந்த பணி நடந்து வருகிறது.
இந்த வகையில் புதிதாக நான்கு ஏவுகணைகளை தயாரிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இவை மிக விரைவில் முப்படைகளில் இணைக்கப்பட உள்ளன.
தற்போதைய நிலையில், இந்தியாவிடம், ௧௬௦ அணு ஆயுதங்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் ௧௬௫; சீனாவிடம் ௩௫௦; அமெரிக்காவிடம் ௫,௪௨௮; ரஷ்யாவிடம் ௫,௯௭௭ அணு ஆயுதங்கள் உள்ளன.
சீனாவை குறிவைத்து புதிய ஏவுகணைகளை தயாரித்து வரும் அதே நேரத்தில், தன் பலத்தை உயர்த்திக் கொள்ளும் முயற்சியிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இதன்படி, அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காக, ௭௦௦ கிலோ புளுட்டோனியத்தை இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளது. இவற்றின் வாயிலாக, ௧௩௮ முதல் ௨௧௩ அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் இதற்காக புதிய அணு உலை தயார்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.
'ஹைப்பர்சோனிக்' எனப்படும் ஒலியின் வேகத்தைவிட, ஆறு மடங்கு அதிக வேகத்தில் செல்லக் கூடிய அதிநவீன ஏவுகணை சோதனையை, நம் நாடு, ௨௦௧௯ ஜூனில் நடத்தியது. முதல் சோதனை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, ௨௦௨௦ செப்டம்பரில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனை வெற்றிகரமாக அமைந்தது.இந்நிலையில், இந்த ஏவுகணையின் மூன்றாவது சோதனை நேற்று முன்தினம் ஒடிசாவின் டாக்டர் அப்துல் கலாம் தீவில் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த சோதனையின் முடிவுகள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.தற்போதைய நிலையில், அமெரிக்கா மற்றும் சீனா மட்டுமே ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.