மேட்டுப்பாளையம்:ஊட்டி ரோட்டில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில், வெள்ளை பெயின்ட் அடிக்காததால், வேகத்தடை இருப்பதே தெரிவதில்லை. வேகமாக வரும் வாகனங்கள், குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
மேட்டுப்பாளையம் -- ஊட்டி ரோடு, தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்டதாகும்.
இவ்வழியாக தினமும், 1000க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள் சென்று வருகின்றன.
கல்லாறு பகுதியில், வனவிலங்குகள் ரோட்டை கடந்து செல்லும் போது, வாகனங்களில் அடிபட்டு இறந்தும், காயமடைந்தும் வருகின்றன. பயணிகளும் பலத்த காயம் அடைந்து வருகின்றனர்.
இதனால் கோர்ட் உத்தரவின் பேரில், ஊட்டி ரோட்டில் வேகத்தடைகள் அமைக்கும்படி, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், மேட்டுப்பாளையம் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், ஊட்டி ரோட்டில், ஒன்றாம் பாலத்தில் இருந்து, மலைப்பாதை துவங்கும் கொண்டை ஊசி வளைவு வரை, ஆறு இடங்களில் வேகத்தடைகள் அமைத்துள்ளது.
ஒவ்வொரு வேகத்தடையிலும், சிறிது சிறிதாக, ஆறு தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ரோட்டில் வேகத்தடைகள் இருப்பது தெரிவதில்லை.
இதனால் வேகத்தடை உள்ள இடங்களில், இருசக்கர வாகன விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதில் பலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
எனவே ரோட்டில் வேகத்தடைகள் இருப்பது குறித்து அறிவிக்க, வெள்ளை பெயின்ட் அடிக்க வேண்டும்.
பெயரளவுக்கு சில தடைகள் மீது மட்டும் பெயின்ட் அடித்து விட்டு, மீதமுள்ளவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது நெடுஞ்சாலைத்துறை. இதனால் விபத்து தொடர்கதையாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி செயற் பொறியாளர் முரளிகுமார் கூறுகையில், ஊட்டி ரோட்டில், ஆறு இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் மூன்று இடங்களில், வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. பெயின்ட் அடிக்கும் இயந்திரம் பழுதானதால், தொடர்ந்து அடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேகத்தடை இருப்பதற்கான விளம்பர போர்டுகள் வைக்கப்படும், என்றார்.