பொன்னேரி,--பொன்னேரி புதிய தேரடி சாலையில், பாதாள சாக்கடை திட்டப் பணிகளின்போது, சாலை சேதம் அடைந்தது. அதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம், சிமென்ட் சாலையை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு உள்ளது. இப்பணிகளுக்காக புதிய தேரடி சாலையில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
இந்த சாலையில், பேருந்து நிலையம் அமைந்துள்ள நிலையில், பேருந்துகள் உள்ளே வந்து செல்வதில்லை. இவை, தேரடி, ஹரிஹரன் பஜார் சாலைகள் நின்று, செங்குன்றம், பழவேற்காடு, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
இதனால், தேரடி பகுதி மற்றும் ஹரிஹரன் பஜார் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேரடி பகுதியில் சாலையோர கடைகளும் அதிகளவில் உள்ளன.
இவை பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருவதுடன், அவர்களிடம் வாக்குவாதங்களிலும் ஈடுபடுகின்றனர்.
ஹரிஹரன் பஜார் சாலையிலும், தற்போது பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதற்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன. இதனாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சாலையோர கடைகளை அகற்றவும் காவல்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என, பொதுமக்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சாலையோர கடைகளை அகற்றி, போதிய காவலர்களை நியமித்து வாகனங்கள் சீராக செல்ல காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.