கோவை:கோவை மாவட்டத்தில், மகளிர் குழுக்களுக்காக ரூ.1,276.22 கோடி வங்கி கடன் வழங்கியுள்ளதாக, கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.
பெண்கள் முன்னேற்றத்துக்கும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுதவி வழங்கி, வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது.
நகர்ப்புறங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த மகளிரை கொண்டு குழுக்கள் அமைத்து, வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி, தனி நபர் கடன், குழு கடன் மற்றும் வங்கி கடன் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில், 6,255 மகளிர் சுய உதவிக்குழுக்கள், நகர் பகுதிகளில், 5,225 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஒன்றரை ஆண்டுகளில் ஊரக பகுதியில், 542 புதிய மகளிர் சுய உதவி குழுக்களும், 459 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கொண்டு, சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற, 2,060 குழுக்களுக்கு ரூ.62.46 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் குழுக்களுக்காக ரூ.1,276.22 கோடி வங்கி கடன், 40 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.14 கோடி பெருங்கடன், சமுதாய முதலீட்டு நிதியாக, 146 குழுக்களுக்கு ரூ.107.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.
147 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குழுக்களுக்கு சிறப்பு நிதி ரூ.22 லட்சம், விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு, ரூ.3.74 கோடி வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் கருவி வங்கிகள் அமைக்க ரூ.58.10 லட்சம், புறக்கடை கோழி வளர்ப்புக்கு ரூ.20.61 லட்சம், அசோலா வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.11.45 லட்சம், பண்ணை சாரா தொழில் நடவடிக்கைகளுக்கு ரூ.1.50 கோடி என, 10 ஆயிரத்து, 948 மகளிர் குழுக்களுக்கு, ரூ.1,297.46 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.